Published:Updated:

`வென்றது ஜெயலட்சுமியா.. விஜயலட்சுமியா..?!' -சின்னத்தையே மாற்றிய கடலூர் தேர்தல் அதிகாரி

`நாங்கள் கூறிய புகாரைக் கூடக் கேட்காமல், விஜயலட்சுமி வெற்றிபெற்றதாகச் சான்றிதழும் கொடுத்துவிட்டார்கள்'

தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன்
தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன்

கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவடைந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி, குமளங்குளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே ஊரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.

ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்
ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்

நேற்று நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், ``விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றிபெற்றார்” என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். ஆனால் அவரின் புகாரை ஏற்றுக்கொள்ளாத தேர்தல் அதிகாரிகள், ``அங்கு வெற்றிபெற்றது விஜயலட்சுமிதான். உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த ஜெயலட்சுமி வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்தார். தேர்தல் அதிகாரியின் செயல்பாடு குறித்து நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன், “ தேர்தல் ஆணையம் எனக்குத்தான் ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியது (ஒப்புகைச் சீட்டு ஆதாரத்தைக் காட்டுகிறார்). காவல் நிலையத்திலும் அந்தச் சின்னத்தைப் பதிவு செய்துதான் வாக்கு சேகரித்தேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.

ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்
ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்

எங்கள் ஊரில்கூட நீங்கள் கேட்டுப் பாருங்கள். 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்றேன். ஆனால் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்கள். அதுகுறித்து நாங்கள் கூறிய புகாரைக் கூடக் கேட்காமல், விஜயலட்சுமிக்கு வெற்றிபெற்றதாகச் சான்றிதழும் கொடுத்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரியாக இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பணம் வாங்கியிருக்கிறார்” என்றார் கண்ணீருடன்.

நாங்கள் கூறிய புகாரைக் கூடக் கேட்காமல், விஜயலட்சுமிக்கு வெற்றிபெற்றதாகச் சான்றிதழும் கொடுத்துவிட்டார்கள்.
ஜெயலட்சுமி

இதுகுறித்து தேர்தல் அதிகாரி சுப்பிரமணியத்திடம், `குமளங்குளத்தில் வெற்றிபெற்றது யார்.. அவர் எந்தச் சின்னத்தில் நின்றார்?' எனக் கேட்டோம். “ அங்கு வெற்றிபெற்றது ஆட்டோ ரிக்சாதான். வேட்பாளர் விஜயலட்சுமி” என்றார்.

தொடர்ந்து, “அப்படியானால் ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் முறைகேடாக ஆட்டோ சின்னத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தாரா. அவர் வைத்திருக்கும் ஆவணங்கள் போலியானது என்று கூறுகிறீர்களா?” என்றோம். இதற்குத் தேர்தல் அதிகாரியிடம் பதில் இல்லை.

உதவி தேர்தல் அதிகாரி கவிதை
உதவி தேர்தல் அதிகாரி கவிதை

அப்போது, அங்கிருந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதை என்பவர், “ ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் என்பவர்தான் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வெற்றிபெற்றார். ஜெயலட்சுமி என்பதற்கு பதிலாக விஜயலட்சுமி என எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது. மற்றபடி விஜயலட்சுமியை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று ஒப்புக்கொண்டு ஒதுங்கிவிட்டார். ஆனால், இதன்பிறகும் தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதிக் கடிதம், கையெழுத்திட்ட ஒப்புகைச் சீட்டு என ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் கொடுக்கும் ஆதாரங்கள் எதுவும், வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம் இல்லை. இவை அனைத்தும் தெளிவாகத் தெரிந்த நிலையிலும் மௌனம் காக்கிறது தேர்தல் ஆணையம்.

“ஏதோ காரணத்துக்காக விஜயலட்சுமியை வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்கள். இனி அவருக்காகச் சம்பந்தப்பட்ட படிவம் 9-ல் மாற்றம் செய்யும் வேலைகளை தேர்தல் ஆணையம் உடனே மேற்கொள்ளும்” என்றனர் சில அதிகாரிகள்.

அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர்
அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர்

தேர்தல் அதிகாரியின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனைத் தொடர்பு கொண்டோம். ``இதுகுறித்த புகார் இப்போதுதான் எனக்கு வந்தது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது. ஆனால், புகார் வந்திருப்பதால் நானும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வேன். தற்போது வந்திருக்கும் தகவல்படி படிவம் 9-ல் விஜயலட்சுமிக்குத்தான் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர்” என்றார் இயல்பாக.