Published:Updated:

`சான்றிதழ் செல்லாது; அதிகாரிகள் மீது நடவடிக்கை!' - நோட்டீஸ், போஸ்டரால் அதிரும் காரைக்குடி

சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் ஒரே பதவிக்கு இரண்டு வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.

தேவி வீட்டுமுன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்
தேவி வீட்டுமுன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏற்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில். வேட்பாளர் தேவி வெற்றிபெற்றது செல்லாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கண்டன போஸ்டர்
கண்டன போஸ்டர்

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் ஒரே பதவிக்கு இரண்டு வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.

முதலில் எங்களுக்குத்தான் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது எனக் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவியும், விடுபட்ட ஓட்டுகள் முழுமையாக எண்ணப்பட்ட பின் சான்றிதழ் வழங்கப்பட்டதால் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என்று பிரியதர்ஷினி தரப்பிலும் சொல்லப்பட்டதால், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம் முற்றியது.

இந்நிலையில், இரு தரப்பின் ஆதரவாளர்களும் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தனித்தனியாக போஸ்டர்களும் ஒட்டினர். பரபரப்புக்கு இடையே, பிரியதர்ஷினி பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு ஒன்றை அளித்தார். அதில் `சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றுவிட்டார் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருக்கலாம். எனவே, பிரியதர்ஷினி பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

பிரியதர்ஷினியின் போஸ்டர்
பிரியதர்ஷினியின் போஸ்டர்

மனுவின் விசாரணையில் பிரதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர் தேவிக்கு அளிக்கப்பட்ட வெற்றிச் சான்றிதழ் செல்லாது என்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேவி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், ``சங்கராபுரம் ஊராட்சி வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டதால் மறு வாக்கு எண்ணிக்கை தீர்வாக இருக்கும் என இரு தரப்பினரிடம் தகவல் தெரிவித்தோம். இதில் தேவி தரப்பில் அவரின் கணவர் மாங்குடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனத் தெரிவித்து வாக்கு எண்ணும் அறையிலிருந்து வெளியே சென்றார்.

அவர்களின் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. பிறகு, மறுவாக்கு எண்ணிக்கை வாக்கு சாவடி வாரியாக அலுவலர்களும் பிரியதர்ஷினியின் முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கண்காணிப்பில் வாக்குகள் எண்ணப்பட்டுச் சரிபார்க்கப்பட்டதில் பிரியதர்ஷினி, தேவியைவிட 63 வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்றது உறுதி செய்யப்பட்டது. எனவே, தேவிக்கு வழங்கப்பட்ட தேர்தல் முடிவு அறிவிப்பு சான்றை ரத்து செய்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நபர்கள் பதவி ஏற்பு
மற்ற நபர்கள் பதவி ஏற்பு

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர். காரைக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் முடிவு பெற்ற நிலையிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.