Published:Updated:

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி... கரூர் தேர்தல் குளறுபடி!

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

``இதற்காக, கடந்த மூன்று மாசமா நான் அவ்வளவு உழைச்சிருக்கேன். கடன் வாங்கி நிறைய செலவு செஞ்சிருக்கேன். இப்போது, ஆசைகாட்டி மோசம் செஞ்சது போல இப்படி திடீர்னு, நடந்த தேர்தல் செல்லாதுனு அறிவிச்சா என் நிலைமை என்னாகும்... "

கரூரில் பெண்களுக்கான வார்டில் போட்டியிட்டு, ஒரு ஆண் துணைத்தலைவரான தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். இதனால், அந்த வார்டில் வெற்றிபெற்ற ஆண் வேட்பாளர், `இந்த விவகாரத்தை கோர்ட் வரை இழுப்பேன்' என்று சபதம் ஏற்றுள்ளதால், மேற்படி விவகாரம் பரபரப்புக்கு வித்திட்டிருகிறது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

கரூர் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இந்தத் தேர்தலில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு, பெண்களுக்கு (பொது) என ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பு யாருக்கும் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், இந்த வார்டில் ஆண் வேட்பாளர்கள் ஜெயசீலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றார். பின்னர் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற சான்றிதழ்
கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற சான்றிதழ்
`புரிந்துகொள்ளுங்கள்... ரஜினிக்கு நான் செய்தித்தொடர்பாளர் இல்லை!'- தமிழருவி மணியன் விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தபோதோ, மனுவைப் பரிசீலனை செய்தபோதோ இதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. தற்போது, தேர்தல் ஆணையத்தால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. இதையடுத்து, கலெக்டர் அன்பழகன் உத்தரவுப்படி தேர்தல் அலுவலர், சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டில் நடந்த தேர்தலை செல்லாது என்று ரத்துசெய்து அறிவித்துள்ளார். இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணமூர்த்திக்கும் இந்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் முடிவில் இருக்கிறார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கிய அந்த நோட்டீஸில், ``கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு, பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த இடஒதுக்கீட்டுக்கு மாறாக ஆண் வேட்பாளர்கள் ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வேட்புமனு தாக்கல்செய்து, தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதில், கிருஷ்ஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நடந்த மறைமுகத் தேர்தலில் கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக மாநிலத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

ஆனால், சமீபத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், 6-வது வார்டு உறுப்பினர் பதவித் தேர்தல், இட ஒதுக்கீட்டுக்கு மாறாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தும், அதற்கு மாறாக நடத்தப்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஆகிய 2 தேர்தல்களும் செல்லாது. அதனால், இந்தத் தேர்தல்களை ரத்துசெய்து உத்தரவிடப்படுகிறது. சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கும் மாநிலத் தேர்தல் ஆணையம் மறு அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி, ``ஆறாவது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியிட்டதாக இப்போது அதிகாரிகள் சொல்றாங்க. ஆனா, அப்படி எந்தவித அறிவிப்பையும் வெளியிடல. அதேபோல், வேட்புமனு தாக்கல் செய்யும்போதும் வேட்புமனு பரிசீலனையின்போதும், நாங்கள் போட்டியிட்ட 6-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதுனு சொல்லவுமில்ல. நான் வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், மறைமுகத் தேர்தல்'ல துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவிக்கல.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

ஆனால், இப்போது திடீர்னு 6-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதுனு சொல்லி என் உறுப்பினர் பதவியையும், துணைத்தலைவர் பதவியையும் ரத்துசெய்வதாக அறிவிக்கிறாங்க. அதிகாரிகள் அலட்சியத்தால் நடந்த தவறு இது. ஆனால், இதற்காகக் கடந்த மூன்று மாதங்களாக நான் அவ்வளவு உழைச்சிருக்கேன். கடன் வாங்கி நிறைய செலவு செஞ்சிருக்கேன். இப்போது, ஆசைகாட்டி மோசம் செஞ்சது போல இப்படி திடீர்னு, நடந்த தேர்தல் செல்லாதுனு அறிவிச்சா, என் நிலைமை என்னாகும். இதை நான் சும்மா விடப்போறதில்ல. இதற்குக் காரணமான அத்தனை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கிக்கொடுப்பேன்" என்றார் கோபமாக.

அடுத்த கட்டுரைக்கு