Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி; பிரியாணியுடன் கறிவிருந்து!' - மக்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர், பிரியாணி, கறிவிருந்துடன் மக்களுக்கு நன்றி தெரிவித்து அசத்தியிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருப்பவர், முத்துப் பெருமாள். முன்னாள் சேர்மனான இவர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 25-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார்.

பிரியாணி விருந்து
பிரியாணி விருந்து

அவரை எதிர்த்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருமாறன் என்பவர் வெற்றிபெற்ற நிலையில், 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் முத்துப் பெருமாள். தோல்வியடைந்த நிலையிலும் வாக்காளர்களுக்கு பிரியாணி, கறிவிருந்து வைத்து அசத்தியிருக்கிறார்.

முத்துப் பெருமாளிடம் பேசினோம். ``கடலூர் மாவட்டம், டி.முட்லூர்தான் என் சொந்த ஊர். கடந்த 20 வருடங்களாக ஒன்றியச் செயலாளராக இருக்கிறேன். 2006-ம் ஆண்டு கவுன்சிலராகப் பதவி வகித்திருக்கிறேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு 16,000 வாக்குகளைப் பெற்றேன். ஆனால், அதைவிடக் கூடுதலாக 3,000 வாக்குகள் பெற்று, என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் வெற்றிபெற்றார். தோல்வி அடைந்ததற்காக, மக்களை சந்திக்காமல் இருக்க முடியுமா? `தேர்தலில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் நம்மை சந்திக்க வருவார்' என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

அதேசமயம், எனது பணி கட்சியை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அதனால் 'இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கான உறுப்பினர்கள் சேர்க்கையுடன், `ஊர் விருந்து’ என்ற நிகழ்ச்சி மூலம் நன்றி சொல்வதற்காக மக்களைச் சந்திக்க இருக்கிறேன்' என்று முன்னதாக நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தினேன். அதன்படி பெரியாண்டி கோயில் என்ற கிராமத்தில் மக்களைச் சந்தித்தேன். மக்களோடு மக்களாக அவர்களுடன் நின்று அவர்களின் குறைகளைக் கேட்டேன். அதேபோல அப்பகுதியில் இருக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் இளைஞர்கள் கூறும் கருத்துகளையும் கேட்டறிந்தேன். மக்களுடன் சாப்பிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் பிரியாணி, கறி விருந்துக்கு ஏற்பாடுசெய்திருந்தேன். அவர்களுடன் ஒருவனாக அமர்ந்து சாப்பிட்டது அவர்களுக்கும் மகிழ்ச்சி. எனக்கும் அது மனநிறைவைத் தந்தது. இனி ஒவ்வொரு வாரமும் அனைத்து ஊர்களுக்கும் சென்று இப்படி மக்களைச் சந்திப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி இயல்பு. ஆனால், மக்கள் என்றும் நிலையானவர்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு