Published:Updated:

`கைலி கட்டிக்கொண்டு உள்ளே வரக்கூடாது!’ - தேவகோட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த தாசில்தார்

தாசில்தார் அலுவலகம் முன்
தாசில்தார் அலுவலகம் முன்

கைலி, டிராயருடன் பிரவேசிக்கக் கூடாது என்று தேவகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் முன்பு ஒட்டிப்பட்டிருந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், அலுவலக வளாகத்திற்குள் கைலி மற்றும் அரை டிராயருடன் பிரவேசிக்கக் கூடாது" என வட்டாட்சியர் பெயரில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் தேவகோட்டை
வட்டாட்சியர் அலுவலகம் தேவகோட்டை

இந்தத் தகவல் சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக தேவகோட்டை பகுதி சமூக ஆர்வலர் கார்த்திக் நம்மிடம் பேசியபோது, ``வட்டாட்சியர் அலுவலகம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இங்கு ஏழை எளிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை வந்து செல்வார்கள்.

இங்கு இப்படித்தான் வரவேண்டும் கைலி, அரை டிராயர் கூடாது என்பது சரியாகாது. கோயில் ஸ்தலங்களில் அவ்வாறு சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பொதுமக்கள் கூடும் இடங்களில் தெரிவிக்கக் கூடாது. கூலி வேலை செய்யும் பலரும் கைலிதான் கட்டுவார்கள். பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வி சலுகைக்காகச் சான்றிதழ் பெற அரை டிரவுசருடன் வரலாம். இதைக் கட்டுப்படுத்த முடியாது.

தேவகோட்டை
தேவகோட்டை

எனவே, தாசில்தார் அவரது அலுவலக வளாகத்தில் இப்படி ஒட்டியது தவறான ஒன்று. அதை உடனடியாக நீக்க வேண்டும்" என்றார். தேவகோட்டை பகுதி விவசாயி ஒருவர் நம்மிடம்,``வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள்தான் தாசில்தார் அலுவலகத்திற்கு அதிகமாக வருகின்றனர். அவர்களுக்கு உடையில் கட்டுப்பாடு விதிப்பது சரியாகாது.

முதியவர்கள் சிலர் சட்டை இல்லாமல் துண்டுடன் வருவார்கள். அவர்களிடம் போய் கட்டுப்பாடுகள் பற்றிப் பேசமுடியுமா? எனவே, தாசில்தார் இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும்" என்றார்.

இதுகுறித்து தேவகோட்டை தாசில்தார் தாஸிடம் கேட்டபோது,``ஆபீஸுக்கு வரும்போது டிசென்ட்டாக வரவேண்டும். சில படித்த நபர்களே டிராயருடன் வருகின்றனர். அதற்கு என்ன செய்ய முடியும்? உடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என ஒரு பொதுவான தகவலாகப் போட்டேன்.

தாசில்தார் அலுவலகம் முன்
தாசில்தார் அலுவலகம் முன்

இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பலரும் இங்கு வேட்டியோடும் வருகின்றனர். அப்படியே கைலியோடு வந்தால் அடித்தா துரத்துகிறோம்? அப்படியெல்லாம் இல்லை. தகவலுக்காகத்தான் அந்தப் பதிவு" என்றார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தாசில்தாரிடம் பேசிய பின் நம்மிடம் பேசிய கலெக்டர், ``பொதுமக்கள் பொது இடங்களுக்கு டிராயர் மற்றும் கைலியோடு வரும் சூழல் ஏற்படும். அப்போது அவர்களை வரக்கூடாது என்று சொல்லமுடியாது. எனவே, தாசில்தாரை அந்தத் தகவலை நீக்கச் சொல்லிவிட்டேன். அவர் கண்டிப்பாக நீக்கிவிடுவார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு