Published:Updated:

`கடைசி நேரத்தில் துரோகம் செய்துட்டாங்க; விஷம் குடித்துவிட்டார்!’- கதறும் தேமுதிக வேட்பாளரின் மனைவி

அ.தி.மு.க. வேட்பாளர் வாபஸ் வாங்காததால் என் கணவரும் வேட்பாளருமான ரஜினிகாந்த் விஷம் குடித்துவிட்டார் என்று கண்ணீர்மல்க சுகந்தி கூறினார்.

தே.மு.தி.க வேட்பாளர் ரஜினிகாந்த்
தே.மு.தி.க வேட்பாளர் ரஜினிகாந்த்

திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் ஊராட்சி தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் தே.மு.தி.க கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் ஒன்றிய கவுன்சிலர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ரஜினிகாந்த் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சி செய்த துரோகத்தால் தேர்தல் அலுவலகத்திலேயே வேட்பாளர் ரஜினிகாந்த் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் ரஜினிகாந்த்
வேட்பு மனு தாக்கல் செய்யும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் மனைவி சுகந்தியிடம் பேசினோம். ``என்னுடைய கணவர் ரஜினிகாந்த், தே.மு.தி.க-வில் இருந்துவருகிறார். நானும் மகளிரணியில் கிளைச் செயலாளராக உள்ளேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க உள்ளது. அதனால், இடஒதுக்கீடு நடந்தபோது புட்லூர் வார்டை தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கும்படி அ.தி.மு.க-விடம் கேட்கப்பட்டது. ஆனால், அந்த வார்டை அ.தி.மு.க-வினர் கொடுக்க மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக 2-வது வார்டை ஒதுக்கினார்கள். அதனால்தான் அந்த வார்டில் என் கணவர் ரஜினிகாந்த் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க சார்பிலும் வெள்ளியூரைச் சேர்ந்த முருகேசன், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுகுறித்து ரஜினிகாந்த், தே.மு.தி.க-விலும் அ.தி.மு.க-விலும் கேட்டுள்ளார். அதற்கு, முருகேசன், மனுவை வாபஸ் பெற்றுவிடுவார் என்று கூறினர். அதை நம்பிய என் கணவர், நேற்று தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றார்.

வேட்பாளர்கள் பட்டியல்
வேட்பாளர்கள் பட்டியல்

வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி 1 மணி நேரத்துக்கு முன்புவரை அ.தி.மு.க-வினரிடம் போனில் பேசியுள்ளார். அப்போதுகூட அவர்கள் நிச்சயம் வாபஸ் பெற்றுவிடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால், கடைசிவரை அ.தி.மு.க வேட்பாளர் முருகேசன் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. அதோடு சம்பந்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகளும் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர். அதனால் என் கணவர், மனமுடைந்துள்ளார். பின்னர் அங்கேயே எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். அதைப்பார்த்தும் கட்சியினரும் அங்குள்ளவர்களும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்த்தபோது மயக்கத்திலேயே இருந்தார். தற்போது அவரின் உடல்நலம் ஓரளவு பரவாயில்லை. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க-வினர் இப்படிச் செய்துவிட்டனர். தற்கொலை முயற்சி செய்த தகவல் கட்சித் தலைமைக்குத் தெரிந்ததும் மூத்த நிர்வாகிகள் எங்களைத் தொடர்புகொண்டு பேசினர். ஆனால், திருவள்ளூர் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் இதுவரை பேசவில்லை. அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்சிக்காக உழைத்த அவருக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டது மனவருத்தமாக இருக்கிறது" என்றார்.

சிகிச்சை பெறும் ரஜினிகாந்த்
சிகிச்சை பெறும் ரஜினிகாந்த்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியிடமும், தே.மு.தி.க-வின் மாவட்ட நிர்வாகி ஒருவரிடமும் வேட்பாளர் ரஜினிகாந்த் போனில் பேசும் ஆடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதில், `மாவட்டம், நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்' என்று தொடங்கும் ஆடியோவில் எதிர்முனையில் பேசுபவர், `நீ போய் அவரைப்பாரு. அந்த (அ.தி.மு.க.) ஒன்றியச் செயலாளரைப் பார்த்திடு' என்று கூறுகிறார். அதற்கு ரஜினிகாந்த், அந்த வார்டுக்கு அவரோட (அ.தி.மு.க நிர்வாகி) பையனும் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.' என்று கூறுகிறார். அதற்கு மாவட்ட நிர்வாகி, `அவரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டேன்' என்று கூறுவதோடு ஆடியோ முடிவடைகிறது. அடுத்த ஆடியோவில், அ.தி.மு.க நிர்வாகியிடம், `உங்க ஆளு (அ.தி.மு.க வேட்பாளர்) வேட்பு மனுவை ரிட்டன் வாங்கல' என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் அ.தி.மு.க. நிர்வாகி, `பி.பாம் கொடுத்தவங்ககிட்ட போய் கேளு' என்று பதிலளிக்கிறார். இதையடுத்து ரஜினிகாந்த், அ.தி.மு.க என்ன வேலை செய்யும் என்பது தெரிந்துவிட்டது. கூட்டணி வைத்ததற்கு எங்களைத்தான் குற்றம் சொல்லணும் நன்றி அண்ணா என்பதோடு ஆடியோ முடிவடைகிறது.

வேட்பாளர் ரஜினிகாந்த், தற்கொலை முயற்சி குறித்து புல்லரம்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க திருவள்ளூர் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான சிறுனியம் பலராமனிடமும் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவரும் பதிலளிக்கவில்லை. இருவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

விருப்பமனு
விருப்பமனு

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட ராமஞ்சேரி பஞ்சாயத்தில் கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தவரை வாபஸ் பெற மிரட்டியுள்ளனர். ஆனால், தே.மு.தி.க-வைச் சேர்ந்தவர், அ.தி.மு.க-வினரின் மிரட்டலுக்கு பயப்படுவதுபோல நடித்து அந்தக் கும்பலிடமிருந்து தப்பி வேட்புமனுவை வாபஸ் பெறாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.