Published:Updated:

`கூட்டணிக் கட்சியினருக்கே தி.மு.க ஆதரவு தரவில்லை!' - கொதிக்கும் சேலம் வி.சி.க

திருமாவளவன்
திருமாவளவன்

சேலம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் வி.சி.க-வினருக்கு தி.மு.க ஆதரவு தரவில்லை.

''சேலத்தில் தி.மு.க-வினர் சமூக நீதிக்கு மட்டுமல்ல, கூட்டணி தர்மத்துக்கே விரோதமாகச் செயல்பட்டிருக்கிறது. சேலம் காடையாம்பட்டி ஒன்றியத் தலைவர் பதவி பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அப்பதவிக்கு போட்டியிட தி.மு.க-வினர் யாரும் அவருக்கு முன்மொழியாததால் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வாகியிருக்கிறது'' என்று கொதிக்கிறார்கள் சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

சாம்ராஜ்
சாம்ராஜ்

இதுபற்றி காடையாம்பட்டி வி.சி ஒன்றிய கவுன்சிலர் சாம்ராஜ், ``சேலம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 19 ஒன்றிய கவுன்சிலர்களை உள்ளடங்கியது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க 7, பா.ம.க 1, தி.மு.க 2, விடுதலைச் சிறுத்தைகள் 1, காங்கிரஸ் 1, சுயேச்சை 7 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்கள். இதில் 10 கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பவர்களே ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆக முடியும்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாரியம்மாளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நானும் சுயேச்சை கவுன்சிலர் மணி என்பவரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் நான் தி.மு.க கூட்டணியில் என்னோடு சேர்ந்து 4 பேரும், சுயேச்சை 5 பேரும் தயாராக இருந்தார்கள். இன்னும் இரண்டு பேரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தத் தருணத்தில் 6-ம் தேதி இரவு தி.மு.க-வை சேர்ந்த கன்னங்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரனும் காடையாம்பட்டி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சின்ராஜும் '10 பேர் ஆதரவு தருகிறார்கள்' என்று கூறி உடனே காடையாம்பட்டி தி.மு.க அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். நானும் சந்தோஷமாகப் போனேன். அங்கே போனதும் கன்னத்தில் அறைந்ததைப் போல சுயேச்சை பெண் கவுன்சிலர் மணிக்கு ஆதரவு தரும்படியும், பத்து கவுன்சிலர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைவரும் மைசூர் போக அழைத்தார்கள்.

அதற்கு நான், 'உங்கள் கூட்டணியைச் சேர்ந்த எனக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்' என்று ரூ.35 லட்சம் வரை கொடுப்பதாகக் கூறினேன். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்க முடியாது. சுயேச்சையான இந்த அம்மாவுக்கு ஆதரவு கொடு. அடுத்த முறை பார்த்துக்கொள்வதாகக் கூறினார்கள். உடனே தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடமும் பேசினேன். அவரும் `சுயேச்சை வேட்பாளர் மணிக்கு ஆதரவு கொடுங்கள். அடுத்த முறை விடுதலைச் சிறுத்தைகளுக்கு பார்த்துக்கொள்ளலாம்' என்றார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இப்படிக் கூட்டணி தர்மம்கூட இல்லாமல் பேசினார்கள். அதையடுத்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருக்கு அ.தி.மு.க-வில் மாரியம்மாள் என்பவரை நிறுத்தினார்கள். தி.மு.க சார்பாக நான் வேட்புமனுத்தாக்கல் செய்ய முயன்றேன். ஆனால், தி.மு.க-வினர் என்னுடைய வேட்புமனுவை முன்மொழியாததால் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாரியம்மாள் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டர்'' என்றார்.

இதுபற்றி சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பதவி கேட்கிறார்கள். ஆனால், பணம் கொடுக்கத் தயாராக இல்லை. காடையாம்பட்டி ஒன்றியத்தில் 70 லட்சம் வரை போனதால் யாரும் கொடுக்க தயாராக இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை. ஆமாம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருக்கு தி.மு.க முன் மொழியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு