Published:Updated:

‘எங்க ஆளுங்க அ.தி.மு.க-கிட்ட விலை போயிட்டாங்க!’ -திடீர் ட்விஸ்ட்டால் கொதிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள்

போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் தி.மு.கவினர்
போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் தி.மு.கவினர்

`7 கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருந்தும் தேர்தல்ல தோத்துப் போயிட்டோமுன்னா, எங்க ஆளுங்க விலை போனதுதான் காரணம்.'

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் யூனியனில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 10 இடங்களில் தி.மு.க கூட்டணி 7 இடங்களையும், அ.தி.மு.க 3 இடங்களையும் பிடித்தன. பெரும்பன்மையான கவுன்சிலர்கள் இருப்பதால் தி.மு.க தான் யூனியன் தலைவர் பதவியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 12-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது, அ.தி.மு.க கவுன்சிலர் நடராஜன் வாக்குப் பெட்டியைத் தூக்கிச் சென்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து ஜனவரி 30-ம் தேதி மறுதேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.கவினர் ஏதேனும் உள்ளடி வேலை செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடுவார்கள் என தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் 7 பேரும் தேர்தலைப் புறக்கணித்தனர். இதற்கிடையே மூன்றாவது முறையாக டி.என்.பாளையம் யூனியன் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

தேர்தல் அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி சக்திகணேசன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் 7 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் என அனைவருமே வந்திருந்தனர். 7 கவுன்சிலர்களைப் பெற்றிருக்கும் தி.மு.க தான் யூனியன் தலைவர் பதவியைப் பிடிக்கும் எனப் பலரும் நினைக்க, 3 கவுன்சிலர்களை வைத்திருந்த அ.தி.மு.க யூனியன் தலைவர் பதவியைத் தட்டிச் சென்றது.

பணம் கொடுத்தாதான் கட்சியில யூனியன் கவுன்சிலர் சீட் கிடைக்குது. பணத்தைப் பிரதானமாக நினைக்கிறவங்க, கட்சிக்கு விசுவாசமாக இருப்பாங்களா?... எங்க பணம் கிடைக்குதோ அவங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க.

மொத்தமுள்ள 10 ஓட்டுகளில் ஆறு ஓட்டுகளைப் பெற்று அ.தி.மு.கவைச் சேர்ந்த 10-வது வார்டு கவுன்சிலரான விஜயலட்சுமி யூனியன் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 கவுன்சிலர்களை மட்டுமே வைத்திருந்த அ.தி.மு.கவிற்கு எப்படி 6 ஓட்டுகள் கிடைத்தன. திட்டமிட்டு ஏதோ மோசடியை நடத்தியிருக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் தொடங்கி கலெக்டர் வரை இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர்’ என தி.மு.கவினர் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். ஆனால் கலெக்டர் கதிரவனோ, ‘தேர்தல் நடைபெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன. வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க எங்கேயும் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை. 200 சதவிகிதம் தேர்தல் முறையாகத் தான் நடந்திருக்கிறது’ எனக் கூறினார்.

அப்படியானால் என்னதான் நடந்திருக்கும் என தி.மு.கவினரிடம் பேசினோம். “7 கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருந்தும் தேர்தல்ல தோத்துப் போயிட்டோமுன்னா, எங்க ஆளுங்க விலை போனது தாங்க காரணம். கலெக்டர் முன்னிலையில், வீடியோ பதிவோடுதான் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது. எங்க ஆளுங்க 3 பேர் யாரோ அ.தி.மு.ககிட்ட விலை போயிருக்காங்க. கடைநிலைத் தொண்டன் கொடியைப் புடிச்சிக்கிட்டுக் கட்சிக்காக இரவு பகலா உழைக்கிறான்.

சாலை மறியலில் தி.மு.கவினர்
சாலை மறியலில் தி.மு.கவினர்

ஆனால், இப்படி காசை வாங்கிட்டு ஒருசிலர் கட்சியை அடமானம் வச்சா என்னங்க அர்த்தம். பணம் கொடுத்தாதான் கட்சியில யூனியன் கவுன்சிலர் சீட் கிடைக்குது. பணத்தைப் பிரதானமாக நினைக்கிறவங்க, கட்சிக்கு விசுவாசமாக இருப்பாங்களா?... எங்க பணம் கிடைக்குதோ அவங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க. அ.தி.மு.க ஏமாற்றி வெற்றி பெற்றதா சொல்றதெல்லாம் சுத்தப் பொய். திட்டமிட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டு தெளிவா எங்காளுங்க தான் ஓட்டுப் போட்டுருக்காங்க” எனக் குமுறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு