Published:Updated:

`தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்த அ.ம.மு.க; கடைசிநேர டுவிஸ்ட்!'- இது ஒரத்தநாடு ஊராட்சி தர்பார்

தி.மு.க சேர்மன்
தி.மு.க சேர்மன்

தி.மு.க, அ.தி.மு.க தலா 14 எனச் சரிக்குச் சமமாக இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் சேர்மன் யார் எனத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரத்தநாடு ஒன்றியத்தில் மொத்தம் 31 ஒன்றிய வார்டு கவுன்சில் பதவிகள் உள்ளன. இதில் தி.முக கூட்டணி 18 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 11, அ.ம.மு.க 1, சுயேச்சை 1 இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் அ.தி.மு.கவினர் 3 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து மறைமுகத் தேர்தலில் அந்த வார்டுனுடைய தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் 3 பேருக்கு மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் காலையிலிருந்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒரத்தநாடு யூனியன் அலுவலகம் முன் தி.மு.கவினர் திரண்டனர். தடை விதிக்கப்பட்ட 3 கவுன்சிலர்களும் உள்ளே அனுமதிக்குமாறு போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் நாங்களான எங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள். தேர்தல் அலுவலரை வெளியே வரச் சொல்லுங்கள் நீதிமன்ற உத்தரவின் நகலைக் காண்பியுங்கள் என கோஷமிட்டனர். பின்னர் அவர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

இதற்கிடையில் 28 கவுன்சிலர்களும் அலுவலகத்திற்கு உள்ளே வாக்களிக்கச் சென்றனர். உள்ளே தேர்தல் அலுவலர் முன்னிலையில் மறைமுக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் தி.மு.க, அ.தி.மு.க தலா 14 எனச் சரிக்குச் சமமாக இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் சேர்மன் யார் எனத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு அதன் படி தி.மு.கவைச் சேர்ந்த பார்வதி சிவசங்கரன், அ.தி.மு.க தரப்பில் கலைச்செல்வி என்பவரின் பெயர்கள் எழுதி குலுக்கிப் போடப்பட்டு எடுக்கப்பட்டன.

இதில் தி.மு.க வைச் சேர்ந்த பார்வதி சிவசங்கரன் பெயர் வந்ததால் அவர் ஒன்றியப் பெருந்தலைவராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.கவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அ.தி.மு.கவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் பேசுகையில், ``தி.மு.க ஒரத்தநாடு ஒன்றியத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டார். கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூன்று தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களை வாக்களிக்க முடியாமல் செய்தனர்.

அப்போதும் தி.மு.க 15 ஒன்றிய கவுன்சிலர்களுடன் உள்ளே வாக்களிக்கச் சென்றனர். அ. ம.மு.க, சுயேச்சை கவுன்சிலர்களும் தி.மு.கவிற்கு ஆதரவு கொடுத்திருந்தனர். இதற்கிடையில் ரூ.25 லட்சம் பணம், இன்னோவா கார் தருவதாக எங்க கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சிலரிடம் குதிரை பேரத்தின் மூலம் விலை பேசினர்.

ஊராட்சி அலுவலகம்
ஊராட்சி அலுவலகம்

இந்த நிலையில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மொத்தம் 28 பேர் வாக்களித்ததில் தி.மு.க, அ.தி.மு.க தலா 14 வாக்குகளைப் பெற்று சமநிலை பெற்றது. அதன் பிறகு குலுக்கல் முறையில் சேர்மன் யார் எனத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் தி.மு.க வைச் சேர்ந்த பார்வதி சங்கரன் பெயர் வந்ததால் அவர் சேர்மனாக அறிவிக்கப்பட்டார்.

எங்கள் தரப்பிலிருந்து யார் மாற்றி வாக்களித்தார்கள் எனத் தெரியவில்லை. அ.தி.மு.கவினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எத்தனையோ அத்து மீறல்களில் ஈடுபட்டனர். ஆனாலும் தர்மம் எங்க பக்கம் இருந்ததால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் தர்மம் வென்றது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு