Published:Updated:

அரசு புரொட்டோ கால் தெரியுமா?-சுதந்திர தின விழா மேடையில் அதிகாரிகளிடம் கொந்தளித்த தி.மு.க. எம்.எல்.ஏ!

கடந்த ஆண்டு நீங்கள் பின்வரிசையில் உட்காரவைத்ததால்தான் தலைமைச் செயலகத்திலிருந்து அரசு புரொட்டோ கால் படி எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்காரவைக்க வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வந்திருக்கிறேன்.

மேடையின் பின் வரிசையில் எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்
மேடையின் பின் வரிசையில் எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தேசியக்கொடி ஏற்றிவைத்தார். மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினவிழாவில் கலெக்டர்
சுதந்திர தினவிழாவில் கலெக்டர்

சுதந்திரதினவிழா மேடையில் கலெக்டர், எஸ்.பி., மாவட்ட நீதிபதி, டி.ஆர்.ஓ., நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கலெக்டர், எஸ்.பி. ஆகியோரது குடும்பத்தினருக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இரண்டாவது வரிசையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சுதந்திர தினவிழா கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் மற்றும் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஆகியோர் வந்திருந்தனர்.

எம்.எல்.ஏ.க்களுக்குப் பின்வரிசையில் இருக்கை போடப்பட்டிருப்பதை பார்த்த சுரேஷ்ராஜன் டென்சனாகி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "அரசு புரொட்டோ கால் உங்களுக்கு தெரியுமா. கடந்த ஆண்டு நீங்கள் பின்வரிசையில் உட்காரவைத்ததால்தான் தலைமைச் செயலகத்திலிருந்து அரசு புரொட்டோ கால் படி எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்காரவைக்க வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வந்திருக்கிறேன்" என ஆவேசமாகக் கூறினார் சுரேஷ்ராஜன். அவரை சமாதானம் செய்த அதிகாரிகள் முன் வரிசையில் இருக்கை போட்டுத் தருவதாகக் கூறினர். அதற்கு மறுத்த சுரேஷ்ராஜன் பின் வரிசையிலேயே அமர்ந்து கொண்டார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினவிழாவில் எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்
சுதந்திர தினவிழாவில் எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்

இதுகுறித்து சுரேஷ்ராஜனிடம் பேசினோம், "கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவிலும் இதுபோலத்தான் பின் வரிசையில் இருக்கை போட்டனர். இந்த ஆண்டும் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். கலெக்டர், நீதிபதி, எஸ்.பி. ஆகியோருக்கு முன் வரிசையில் இருக்கை போட்டிருப்பதுபற்றி நான் சொல்லவில்லை. ஆனால் மாவட்ட கேடருக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு முன்வரிசையில் இருக்கைபோட்டுவிட்டு, எம்.எல்.ஏ.க்களுக்குப் பின் வரிசையில் போட்டிருக்கிறார்கள். வேண்டும் என்றே அதிகாரிகள் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள். நான் முன்வரிசையில் அமரவேண்டும் என்பதற்காக வாதாடவில்லை. எம்.எல்.ஏ.என்ற பதவியின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணரவேண்டும் என்றுதான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். என்னை முன்னிலைப்படுத்த விரும்பாததால்தான் நான் பின்வரிசையிலே அமர்ந்துகொண்டேன்" என்றார்.