Published:Updated:

``ஓட்டுக்கு ₹500 கொடுத்தோம்; நாங்க ஏன் அப்படிப் பண்ணப்போறோம்?'' -மிரள வைத்த கரூர் அ.தி.மு.க நிர்வாகி

கோயிலில் வேண்டும் மல்லிகா
கோயிலில் வேண்டும் மல்லிகா

``செல்லாண்டியம்மா, நீதான் அமைச்சரைத் தட்டிக்கேட்கணும்" என்று தி.மு.க பெண் வேட்பாளர் ஒருவர், கணவரோடு சென்று அமைச்சரின் குலதெய்வக் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து வேண்டிக்கொண்டது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

``14 வாக்குகளில் வெற்றிபெற்ற எனது வெற்றியைத் தனது பவரால் மாற்றி, அதிகாரிகளை நிர்பந்தித்து அ.தி.மு.க வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்ற பெற்றதாக அறிவிக்க வைத்தார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவங்க பவர் விளையாட்டுகளை மீறி, எங்களால் ஒண்ணும் பண்ணமுடியவில்லை. செல்லாண்டியம்மா, நீதான் அமைச்சரைத் தட்டிக்கேட்கணும்" என்று தி.மு.க பெண் வேட்பாளர் ஒருவர், கணவரோடு சென்று அமைச்சரின் குலதெய்வக் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து வேண்டிக்கொண்டது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கோயிலில் வேண்டும் மல்லிகா
கோயிலில் வேண்டும் மல்லிகா

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது, காதப்பாறை ஊராட்சி. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஊராட்சியில் தி.மு.க சார்பில் மல்லிகா ராஜேந்திரனும் அ.தி.மு.க சார்பில் கிருபாவதி முருகையனும் போட்டியிட்டனர். கடந்த 2- ம் தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதைத்தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு, மல்லிகா ராஜேந்திரன் 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரிகளால் முதலில் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், `செல்லாத வாக்குகளாக ஒதுக்கப்பட்ட 140 வாக்குகளை மறுபடியும் எண்ணவேண்டும்' என்று கிருபாவதி வைத்த கோரிகையை அடுத்து, மறுபடியும் அந்தச் செல்லாத வாக்குகள் எண்ணப்பட்டன.

கிருபாவதி முருகையன்
கிருபாவதி முருகையன்

அதன் அடிப்படையில், கிருபாவதி முருகையன் காதப்பாறை ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்ததாகச் சொல்கிறார்கள். இதனால், கோபமான மல்லிகா, `போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்த பவர் விளையாட்டு இது' என்று பொருமியதோடு, அமைச்சரின் குலதெய்வ கோயிலுக்கும் அ.தி.மு.க வேட்பாளரின் குலதெய்வ கோயில்களுக்கும் சென்று அங்கபிரதட்சணம் செய்து, `நீயே அவர்களைத் தட்டிக் கேள்' என்று வேண்டி வருவது, பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. தனது கணவர் சகிதம் கோயில் கோயிலாகப் போய் இப்படி விநோதமாக நியாயம் கேட்கும் மல்லிகா, தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில், இதுசம்பந்தமாக மல்லிகாவின் கணவரான ராஜேந்திரனிடம் பேசினோம்.

``ஆளுங்கட்சிமீது உள்ள அதிருப்தியில் மக்கள் எங்களுக்குதான் வாக்களிச்சாங்க. கடந்த 2-ம் தேதி தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மறுநாள் அதிகாலை 3 மணிக்குதான் முடிஞ்சது. என் மனைவி 14 வாக்குகளில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவிச்சாங்க. அ.தி.மு.க வேட்பாளர் கிருபாவதி, என் மனைவி ஜெயிச்சதா ஏத்துக்கிட்டாங்க. ஆனா, அப்போ விதிமுறைகளை மீறி உள்ளே புகுந்த அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பனும், பாண்டியனும், `செல்லாத வாக்குகளை எண்ணணும்'னு குட்டையைக் குழப்பினாங்க. தயங்கிய அதிகாரிகளை, `இது அமைச்சரோட உத்தரவு'னு மிரட்டி பணியவச்சாங்க.

 ராஜேந்திரன் மல்லிகாவோடு...
ராஜேந்திரன் மல்லிகாவோடு...

எங்களை நெருங்கவிடாமல் அவங்களை வச்சுகிட்டு செல்லாத வாக்குகளாக ஒதுக்கி வைக்கப்பட்ட 140 வாக்குகளை மூன்று முறை எண்ணினாங்க. அந்தச் செல்லாத வாக்குகளில் கிருபாவதி நின்ன சின்னமான பூட்டுல 15 வாக்குகள் விழுந்திருப்பதா சொல்லி, கிருபாவதி 1 வாக்குல வெற்றிபெற்றதா அறிவிச்சுட்டாங்க. செல்லாத வாக்குகள்னு ஒதுக்கி வைக்கப்பட்ட வாக்குகள் திடீர்னு அவங்களுக்கு சார்பா 15 வாக்குகளாக மாறிய அதிசயம்தான் புரியல. அந்தச் செல்லாத வாக்குகள்'ல எங்களுக்கு ஒரு வாக்குகூட வராத மாயம் என்னனும் புரியல.

`தெய்வம் நின்னு கொல்லும்'னு சொல்லுவாங்க. அதனால்தான், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் குலதெய்வ கோயிலான ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயிலுக்குப் போய் அங்கபிரதட்சணம் பண்ணி, `நீயே தப்பு செய்தவர்களை தட்டிக் கேள்'னு வேண்டிக்கிட்டோம்.
ராஜேந்திரன். (மல்லிகாவின் கணவர்)

ஒரு வாக்குல கிருபாவதி ஜெயிச்சதா விடியற்காலையில அறிவிச்சுட்டு, இப்போ 14 வாக்குல ஜெயிச்சதா சொல்றாங்க. நியாயமா நடக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுங்கட்சி அமைச்சருக்குச் சார்பா நடக்குறாங்க. நாங்க எங்கே போய் நியாயம் கேட்பது? `தெய்வம் நின்னு கொல்லும்'னு சொல்லுவாங்க. அதனால்தான், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் குலதெய்வ கோயிலான ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயிலுக்குப் போய் அங்கபிரதட்சணம் பண்ணி, `நீயே தப்பு செய்தவர்களை தட்டிக் கேள்'னு வேண்டிக்கிட்டோம்.

கோயிலில் வேண்டும் மல்லிகா
கோயிலில் வேண்டும் மல்லிகா

அதேபோல், கிருபாவதி முருகையனின் குலதெய்வ கோயிலான குப்புச்சிப்பாளையம் சக்திவிநாயகர் கோயில், ரெட்டிப்பாளையம் புதூர் விநாயகர் கோயில், ஆத்தூர் மகா சோளியம்மன் கோயில், பெரிச்சிப்பாளையம் மாரியம்மன், விநாயகர் கோயில்கள்'னு எனக்கு அநியாயம் இழைத்த அத்தனை ஆளுங்கட்சிப் புள்ளிகளின் குலதெய்வக் கோயில்களுக்கும் கணவரோடு சென்று நியாயம் கேட்டிருக்கிறோம். ஆளுங்கட்சி செய்த அநியாயத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கவும் இருக்கிறோம்" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து, அ.தி.மு.க வேட்பாளர் கிருபாவதியிடம் பேசினோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய, அவரது கணவரான முருகையன்,

``எங்களுக்கு பிஸியா தொழில் போய்ட்டு இருக்கு. எங்களுக்கு ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு நிற்கவே விருப்பமில்லை. அமைச்சர் சொல்றாரேனுதான் என் மனைவியை நிக்க வச்சேன். முதல்ல, 14 வாக்குகளில் மல்லிகா ராஜேந்திரன் ஜெயிச்சதா அறிவிச்சது உண்மைதான். அதைக் கேள்விப்பட்ட அமைச்சர், ஏ.ஆர்.காளியப்பன் மூலமா, `இதுல நாம ஒண்ணும் பண்ண முடியாது'னு சொல்லி அனுப்பினார். ஆனால், 75 வாக்குகளுக்குள் வெற்றி வித்தியாசம் இருந்தால், மறுவாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை வைக்கலாம்'னு தேர்தல் விதிமுறை இருக்கு. அதனால், செல்லாத வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை பண்ணணும்னு கோரிக்கை வெச்சோம். அதற்கு அதிகாரிகள், `மல்லிகா ஒத்துக்கிட்டா, மறுவாக்கு எண்ணிக்கை செய்ய நாங்க தயார்'னாங்க. மல்லிகாவும் ஏத்துக்கிட்டாங்க. செல்லாத வாக்குகள்'ல எங்களுக்கு 15 வாக்குகள் கிடைச்சுச்சு.

முருகையன்
முருகையன்

இதனால், என் மனைவி கிருபாவதி ஜெயிச்சதா அறிவிச்சாங்க. மத்தபடி எந்த முறைகேட்டையும் நாங்க பண்ணல. நாங்க ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தோம். நாங்க முறைகேடு பண்ண நெனச்சா, அவ்வளவு பணம் கொடுத்திருக்கவே மாட்டோமே..." என்று கூறி நம்மை அதிர வைத்தவர், ``மல்லிகா ராஜேந்திரன் நிறைய செலவு பண்ணிட்டார். இப்போ தோல்வி அடைஞ்சதும், இல்லாததும் பொல்லாததையும் கூறி, பரபரப்பை ஏற்படுத்துகிறார். உச்சநீதிமன்றமே சென்றாலும், அவர் கூறும் பொய்யை உண்மையாக்க முடியாது" என்று கூறி, முடித்தார்.

இந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது! - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு #HappyBirthdayDravid

இதுசம்பந்தமாக, போக்குவரத்துத் துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசிய சிலர்,

``தி.மு.க கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஒன்றியங்களிலும், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிலும், ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளிலும், எங்களிடம் படுதோல்வியை அடைஞ்சுட்டாங்க. இந்தத் தோல்வியை கிரகிச்சுக்க முடியாம கண்டபடி உளறிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒண்ணுதான், தி.மு.க ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவர் கோயில் கோயிலாக போய் ஸ்டன்ட் அடிப்பதும். அமைச்சருக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`கரூர் மாவட்டம் அ.தி.மு.க கோட்டைதான்' என்பதை மறுபடியும் மக்கள் இந்த அபார வெற்றிமூலம் நிரூபிச்சுருக்காங்க. அதை தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியால ஏத்துக்க முடியலை. அதனால், அவர் நடத்தும் நாடகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், இத்தகைய அரசியல் ஸ்டன்ட்கள்" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு