Published:Updated:

`தி.மு.க-வுடன் கூட்டணி; தினகரன் பச்சைக்கொடி?' - அ.தி.மு.க-வுக்கு ஷாக் கொடுத்த திருவோணம் அ.ம.மு.க

ஸ்டாலின் - தினகரன்
ஸ்டாலின் - தினகரன்

தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்து திருவோணம் ஒன்றியத்தைப் பிடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையடுத்து, சேர்மன் பதவி தி.மு.க-வுக்கும், துணை சேர்மன் பதவி அ.ம.மு.க-வுக்கும் என இருதரப்பிலும் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினும் தினகரனும் சந்தித்துப் பேசிக்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்து அந்த ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்ற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் தினகரன்
ஸ்டாலின் தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றிய கவுன்சில் வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க வேட்பாளர்கள் 7 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், அ.ம.மு.க இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர். அ.ம.மு.க-வினர் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அந்தக் கட்சிதான் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில், தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்து சேர்மன் பதவியைக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தி.மு.கதான் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் ஒன்றிய, மாவட்ட சேர்மன் பதவிகளையும் பிடிக்கும் சூழ்நிலையும் உள்ளது. பேராவூரணி, திருவோணம், மதுக்கூர் ஒன்றியங்களில் மட்டும்தான் தி.மு.க-வை விட அ.தி.மு.க கூடுதலான இடங்களைப் பிடித்திருக்கிறது.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், சோழமண்டல தளபதி என்று அழைக்கப்படுபவருமான வைத்திலிங்கம் தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க தோல்வியுற்றதை எண்ணி கடும் வருத்தத்தில் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வைத்திலிங்கத்திடம், `என்ன தஞ்சாவூர் இப்படி ஆகிவிட்டது?' என தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில் போனில் கேட்டாராம். அப்போது, `சில ஒன்றியங்களின் சேர்மன் பதவியைப் பிடிக்க வாய்ப்புள்ளது' என வைத்தி அவரிடம் தெரிவித்தாராம். `என்ன செலவானாலும் பராவாயில்லை. அதை விட்டு விடாதீர்கள்' என பதில் கிடைத்ததாம்.

இதையடுத்து வைத்தி, தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களாக இருந்தாலும் சரி, பெரிய தொகை கொடுத்தாவது நம் பக்கம் இழுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு காய்களை நகர்த்தி வருகிறாராம். இதற்குப் பயந்துகொண்டு தஞ்சை ஒன்றியத்தின் கவுன்சிலர்களை ஒவ்வொரு ஹோட்டலாக மாற்றி இருக்க வைத்து பாதுகாத்து வருகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க வேட்பாளர்கள் 7 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், அ.ம.மு.க இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.
.

இந்த நிலையில் திருவோணம் ஒன்றியத்தில் அருணாச்சலம், ஜோதி என இரண்டு பேர் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜோதி என்பவர் முக்கிய பிரமுகரான செல்லக்கண்ணு என்பவரின் மருமகள். அ.தி.மு.க-வில் இருக்கும்போது வைத்திலிங்கத்தால் பாதிக்கப்பட்டவர் செல்லக்கண்ணு. இதனால் அவரை தங்கள் பக்கம் இழுக்க முடியாது. இருந்தாலும் பெரிய அளவில் பேசி அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முயற்சிகள் செய்கின்றனர். அருணாச்சலம் என்பவருக்கு ரூ.50 லட்சம் பணம் தருவதாக வைத்தி தரப்பில் பேசப்பட்டுள்ளதால், அவர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்து திருவோணம் ஒன்றியத்தைப் பிடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அதாவது, தி.மு.க-வில் செல்லம் செளந்தரராஜன் என்பவர் சேர்மன் பதவிக்கு காய்களை நகர்த்துவதாகத் தெரிகிறது. இதையடுத்து, சேர்மன் பதவி தி.மு.க-வுக்கும், துணை சேர்மன் பதவி அ.ம.மு.க-வுக்கும் என இருதரப்பிலும் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுள்ளது. இது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது செய்து, இந்தக் கூட்டணியைத் தடுத்து நிறுத்த முடியுமா? என வைத்திலிங்கம் தரப்பில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

"ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும்…"- அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு தினகரன் கொடுத்த டானிக்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் தினகரனிடம் பேசினார்களாம். அதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகக் கூறப்படுவதால், அ.ம.மு.க-வினர் உற்சாகத்தில் வலம் வருகின்றனர்'' என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு