Published:Updated:

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்புக்குத் தடை! - உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட தி.மு.க

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க-வுக்கு புதிய தெம்பை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு சாதகமாக வந்துள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முடிவுகள் வெளியானதில் சலசலப்பு ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார். இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பில் வழக்கு தொடர்ந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை முறையாக நடக்கிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடைவிதிக்க கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட அவரது வீட்டுக்கு தி.மு.க தரப்பில் வழக்கறிஞர் நீலகண்டன் உள்ளிட்டோர் சென்றனர். ஆனால், தலைமை நீதிபதி வீட்டில் இல்லாததால், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நீதிபதி ஆதிகேசவலுவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் முறையிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்று முறையிட நீதிபதி ஆதிகேசவலு அவர்களை அறிவுறுத்தினார். இதையடுத்து, நீதிபதி சத்தியநாராயணாவின் வீட்டுக்குச் சென்று தி.மு.க-வினர் முறையிட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால், தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறிய அவர், நீதிமன்றத்தில் வந்து நாளை காலையில் முறையிடுமாறு தெரிவித்திருக்கிறார்.