Published:Updated:

`இது இருந்தால்தானே..?' - தி.மு.க வேட்பாளர் வாக்குச்சீட்டுகளை விழுங்கி ஏப்பம்விட்ட பா.ம.க கவுன்சிலர்

மேஜையில் ஜெயப்பிரகாஷ் பெற்ற வாக்கு சீட்டுகள் மூன்றை பா.ம.க மாவட்டச் செயலாளரும் 14-வது வார்டு குன்னம் ஒன்றியக் குழு உறுப்பினருமான அன்பழகன் திடீரென எடுத்து வாயில் போட்டார்.

வாக்குச் சீட்டு
வாக்குச் சீட்டு

ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளரின் வாக்குச் சீட்டுகளை எதிரணியைச் சேர்ந்த பா.ம.க கவுன்சிலர் மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்பழகன்
அன்பழகன்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 23 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரகாஷ் 13 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான நற்குணன் 10 வாக்குகள் பெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க-வினர் மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரினர். 4 முறை எண்ணப்பட்டபோதும் தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் அ.தி.மு.க அணியைவிட 3 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

எனவே, தி.மு.க வெற்றியைத் தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி அறிவிக்க முயன்ற நேரத்தில், மேஜையில் ஜெயப்பிரகாஷ் பெற்ற வாக்கு சீட்டுகள் மூன்றை பா.ம.க மாவட்டச் செயலாளரும் 14-வது வார்டு குன்னம் ஒன்றியக் குழு உறுப்பினருமான அன்பழகன் திடீரென எடுத்து வாயில் போட்டார். அவற்றை மென்று தின்று விழுங்கி தண்ணீரைக் குடித்துவிட்டு, அனைவருக்கும் மத்தியில் ஏப்பமும்விட்டார். அவரது விநோதமான நடவடிக்கையைப் பார்த்த ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெயப்பிரகாஷ்
ஜெயப்பிரகாஷ்

உடனே அ.தி.மு.க வேட்பாளர் நற்குணன் தேர்தல் அதிகாரி கலைச்செல்வியிடம், ``இருவரும் சரிசமமாக வாக்கு பெற்றிருப்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

``நான்கு முறை எண்ணியிருக்கிறோம். வீடியோ பதிவும் உள்ளது'' என்று கூறி வாக்குச் சீட்டை அத்துமீறி எடுத்து அழித்தாலும் தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக கலைச்செல்வி அறிவித்தார்.

வாக்குச் சீட்டு
வாக்குச் சீட்டு

எப்படியாவது ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அ.தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுபட்டது. பல வழிகளில் முயன்றும் தோல்வியடைந்ததால் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பு வாக்குச்சீட்டுகளை அழித்துவிட்டு மறு தேர்தல் நடத்த முயன்றது. ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.