Published:Updated:

`உதயசூரியன் சின்னத்தை எப்படி ஒதுக்கலாம்?’- தேர்தல் அதிகாரியை ஓட ஓடத் தாக்கிய கடலூர் அ.தி.மு.க-வினர்

தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் அலுவலரை அ.தி.மு.க-வினர் ஓட ஓடத் தாக்கிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் அலுவலரை அடித்து இழுத்துச் செல்லும் அ.தி.மு.க-வினர்
தேர்தல் அலுவலரை அடித்து இழுத்துச் செல்லும் அ.தி.மு.க-வினர் ( எஸ்.தேவராஜன் )

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், கடலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக, வரும் 27-ம் தேதி கடலூர் ஒன்றியத்துக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 33 ஒன்றிய கவுன்சிலர்கள், 4 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 51 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி நிறைவுபெற்றது.

தேர்தல் அலுவலர் அருளரசன்
தேர்தல் அலுவலர் அருளரசன்

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதோடு இறுதிப் பட்டியல் வெளியிடும் பணியிலும் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12-வது வார்டு அ.தி.மு.க சார்பில் பிரியதர்ஷினி கணேஷ் மற்றும் 21-வது வார்டு அ.தி.மு.க சார்பில் குமுதம் சேகர் ஆகியோர் தாக்கல்செய்த வேட்புமனுவின் அடிப்படையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல, அதே வார்டுகளில் தி.மு.க கூட்டணியின் சார்பாக சீனு மற்றும் வாணி ராணி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுவின் அடிப்படையில், அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது.

வாக்குவாதத்தில் அ.தி.மு.க-வினர்
வாக்குவாதத்தில் அ.தி.மு.க-வினர்

இந்நிலையில், மாலை 7 மணிக்கு ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் சம்பத்தின் உறவினரும், அ.தி.மு.க-வின் நிர்வாகி சேகர் உள்ளிட்டவர்களும், ”நேரம் கடந்துவிட்ட நிலையில், சீனு மற்றும் வாணி ராணி-க்கு தி.மு.க-வின் சின்னத்தை முறைகேடாக ஒதுக்கியிருக்கிறீர்கள். அதனால் அவர்களுக்கு சுயேட்சை சின்னத்தைத்தான் ஒதுக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

ஆனால், ``உதவி தேர்தல் அலுவலர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில், இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாற்றம் செய்யப்படாது” என்று தேர்தல் அலுவலர் அருளரசன் கூறினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்

அதில் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க-வினர், தேர்தல் அலுவலரும் உதவி ஆட்சியருமான அருளரசனைக் கடுமையாகத் தாக்கி, அவரது இருக்கையிலிருந்து வெளியே இழுத்தனர். மீண்டும் அவரை அடிக்கப் பாய்ந்தபோது உயிருக்கு பயந்த அருளரசன், அருகிலிருந்த மற்றொரு தேர்தல் அலுவலர் அறைக்கு ஓடிச் சென்று பதுங்கினார்.

அந்தக் காட்சியைக் கண்ட தேர்தல் அலுவலர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, வார்டு உறுப்பினர்களுக்கு சின்னம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்குக் காரணமாகத் தேர்தல் அலுவலர் அருளரசன் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அ.தி.மு.க-வினர்.

தேர்தல் அலுவலர்
தேர்தல் அலுவலர்

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டம், காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதேபோல ஒன்றிய அலுவலகத்தின் முன் குவிந்த தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ”சின்னம் ஒதுக்கீடு செய்த பிறகு ஏன் அதிகாரிகள் குளறுபடி செய்கின்றனர்” என்று எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.