Published:Updated:

`விருப்பத்தைச் சொன்னோம்; மக்கள் ஏற்றார்கள்!’ - திருச்சியில் போட்டியின்றி தேர்வான பெண் பிரதிநிதிகள்

கொப்பாவளி உள்ளாட்சி நிர்வாகிகள்
கொப்பாவளி உள்ளாட்சி நிர்வாகிகள்

எங்கள் கிராமத்தில் பட்டியலின மக்களும் வசிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வார்டு ஒதுக்கப்படவில்லை. அதனால், ஆறாவது வார்டு உறுப்பினராகப் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டுகிறது. போட்டியாளர்கள் பிரசாரத்தால், பேருந்து வசதியில்லாத பட்டி தொட்டிகள்கூட பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. ஆனால்,  திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் எவ்வித பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ளது கொப்பாவளி கிராமம். இங்கு சுமார் 950 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊரின் ஊராட்சிக்கு 6 வார்டு உறுப்பினர்கள். அதில் மூன்று பெண்களுக்கும் 3 பொது உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். வேட்புமனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்

ஆனால், கொப்பாவளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கு பெண்களைத் தேர்வு செய்ய முடிவு செய்தார்கள். அந்த வகையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து வார்டுகளுக்கும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி உள்ளிட்ட பெண்கள் உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இதேபோல் செல்வராணி என்பவர் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். அந்தக் கிராம ஊராட்சி பதவிகளுக்கான பொறுப்புகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பெண்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்

கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வராணி பேசுகையில், ``தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எனது விருப்பத்தைக் கிராம மக்களிடம் தெரிவித்தேன். தொடர்ந்து, 50 சதவிகித பெண்கள் இட இதுக்கீடு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றுக்கு எங்கள் கிராமம் முன்மாதிரியாக விளங்கிட முடிவெடுத்தோம்.

அதற்கான முயற்சிகளில் களமிறங்கியபோது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதையடுத்து, மக்களிடம் தொடர்ந்து பேசினோம். அதன் விளைவாகப் பெண்களான நாங்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தோம். மேலும், எங்கள் கிராமத்தில் 3 வார்டுகள் பெண்களுக்கும் மூன்று வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது

பொது வார்டுக்கு பெண்களையே வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்த நாங்கள், எங்கள் கிராமத்தில் பட்டியலின மக்களும் வசிக்கிறார்கள். ஆனால், வார்டு ஒதுக்கப்படவில்லை. அதனால், அவர்களுக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என முடிவெடுத்து ஆறாவது வார்டு உறுப்பினராகப் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள்

எங்களின் முயற்சியை ஏற்றுக்கொண்ட மக்கள், மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார்கள். நிச்சயமாக, எங்கள் கிராமத்தை ஊழலற்ற, மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்னோடி கிராமமாக மாற்றிக் காட்டுவோம்” என்றார் நம்பிக்கையுடன்.

கொப்பாவளி ஊராட்சி பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராணி உள்ளிட்ட பெண்களை ம.தி.மு.க மகளிரணி நிர்வாகி மருத்துவர் ரொக்கையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பலரும் நேரில் வாழ்த்துக் கூறிவருகின்றனர்,

அடுத்த கட்டுரைக்கு