Published:Updated:

`ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட யாகம்!'- கும்பகோணத்தில் தி.மு.க, அ.தி.முக இடையே கடும் மோதல்

தி.மு.க-வினர் வாக்கு வாதம்
தி.மு.க-வினர் வாக்கு வாதம்

பயன்பாடு இல்லாமல் இருந்த கட்டடம் அதனால் பூஜை செய்து கூட்டத்தை நடத்தலாமா என ஆணையரிடம் கேட்டோம். அவரும் ஒப்புதல் கூற சுத்தம் செய்து யாக பூஜை நடத்தினோம். அ.தி.மு.க தரப்பில் இது குறித்து கேட்டதற்கு விளக்கமும் கொடுத்துவிட்டோம்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த முறை பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் ஒன்றிய சேர்மனாக இருந்தார். அவர் பயன்படுத்திய அறையைப் பயன்படுத்தக் கூடாது எனத் தற்போது சேர்மனாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க-வைச் சேர்ந்த காயத்திரி என்பவர் தனக்கென புதிய அறை தயார் செய்து கொண்டதுடன் அரசு விதியை மீறி யாகம் வளர்த்து சிறப்பு பூஜையும் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டதால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

யாக பூஜை
யாக பூஜை

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய பெருந்தலைவராகத் தி.மு.க-வைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கும்பகோணம் ஒன்றிய செயலாளரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய தலைவர் தலைமையில் முதல்கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று அரசு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் தரப்பில் யாக பூஜை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதுடன் ஆணையரிடமும் முறையிட்டனர். இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தி.மு.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான அறிவழகன் என்பவரிடம் பேசினோம், ``கும்பகோணம் ஒன்றியத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியைச் சேர்ந்த காயத்திரி என்பவர் ஒன்றிய சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதற்காக நேற்று யூனியன் அலுவலகத்தில் சட்ட விதியை மீறி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அ.தி.மு.க-வினர்
அ.தி.மு.க-வினர்

அத்துடன் சேர்மனுக்கு எனத் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிற நிலையில் அதில் தங்கக் கூடாது எனக் கருதி இவருக்கு என புதிய அறை ஒன்றை தயார் செய்த பிறகு, அந்தப் புதிய அறையில் யாகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. காரணம் என்னவென்றால் கடந்த முறை எங்க கட்சியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் சேர்மனாக இருந்தார். அவர் பயன்படுத்திய அறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தோடு இதைச் செய்துள்ளனர்.

இதை எங்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இன்று நடந்த கூட்டத்தில் விதியை மீறி அரசுக் கட்டடத்தில் யாகம் நடத்தியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குத் தகுந்த பதிலை அளிக்காமல் 5 நிமிடத்தில் கூட்டத்தை முடித்துவிட்டனர். இதையடுத்து நாங்கள் ஆணையர் பூங்குழலியிடம் முறையிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தி.மு.க-வினர் ஆணையர் அறைக்கே வந்து எங்களிடம் வாக்குவாதம் செய்ததுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட கண்ணாடி
உடைக்கப்பட்ட கண்ணாடி

இதில் ஆணையர் அலுவலகக் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், எங்கள் தரப்பில் இரண்டு பேருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் கோவிந்தராவிடம் புகார் அளித்துள்ளோம். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை" என்றார்.

இது குறித்து அசோக்குமாரிடம் பேசினோம், ``2011-ல் திறக்கப்பட்ட கட்டடத்தை இதுவரை பயன்படுத்தாததால் புழுதி சேர்ந்து பழுதடைந்திருந்தது. அதைச் சுத்தம் செய்ததுடன் பயன்பாடு இல்லாமல் இருந்த கட்டடம் என்பதால், பூஜை செய்து கூட்டத்தை நடத்தலாமா என ஆணையரிடம் கேட்டோம். அவரும் ஒப்புதல் கூற சுத்தம் செய்து யாக பூஜை நடத்தினோம்.

ஊராட்சி அலுவலகத்தில்
ஊராட்சி அலுவலகத்தில்

அ.தி.மு.க தரப்பில் இது குறித்து கேட்டதற்கு விளக்கமும் கொடுத்துவிட்டோம். அதன் பிறகு, அனுமதியில்லாமல் எப்படிச் செய்யலாம் என வாக்குவாதம் செய்து ஆணையரிடமும் தகராறில் ஈடுபட்டனர். இதில் அலுவலகக் கண்ணாடியையும் உடைத்தனர். இவற்றை ஆதாரத்துடன் நாங்கள் புகாராகக் கொடுத்திருக்கிறோம். தோல்வியடைந்துவிட்டதை அ.தி.மு.க-வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் காழ்ப்புணர்ச்சியுடன் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு