Published:Updated:

மரியாதை மட்டும்தான் இருக்கு; பென்ஷன் கேட்டால்?!- 8 ஆண்டுகளாக போராடும் தியாகி மகள்

தியாகி மாடசாமியின் மகள் இந்திரா
தியாகி மாடசாமியின் மகள் இந்திரா

நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், தனக்கு பென்ஷன் வழங்கப்படாமல் 8 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், வீட்டு வாடகைகூட செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் குற்றம்சாட்டுகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட தியாகியின் மகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி, இந்திராநகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், துவக்கிய ஐ.என்.ஏ படையில், தான் சேர்த்து வைத்திருந்த 7,000 டாலரைக் கொடுத்து சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 1972-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இவருக்குத் தாமிரப் பட்டயம் வழங்கியுள்ளார்.

தியாகி மாடசாமி
தியாகி மாடசாமி

இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், ராமகிருஷ்ண போஸ், ராஜகோபால் என்ற 2 மகன்களும், ராமஜெயம், இந்திரா என்ற 2 மகள்களும் உள்ளனர். தியாகி பென்ஷன் பெற்றுவந்த மாடசாமி, கடந்த 2002-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவர் பெற்ற தியாகி பென்ஷன் அவரின் மனைவி வள்ளியமாளுக்கு வழங்கப்பட்டது. இவர்களது கடைசி மகளான இந்திராவைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

இங்கு வள்ளியமாளும், இந்திராவும் மட்டும் வசித்து வந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு வள்ளியம்மாளும் உயிரிழந்தார். இதையடுத்து, தனிமையில் வசித்து வந்த இந்திரா, தன் தந்தையின் பென்ஷன் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால், மாவட்ட நிர்வாகம் எவ்விதப் பதிலும் அளிக்காததால், இந்திய சுந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கத்தின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

சுதந்திரதின விழாவில் ஆட்சியர் சந்திப்பில்..
சுதந்திரதின விழாவில் ஆட்சியர் சந்திப்பில்..

இதையெடுத்து, கடந்த 20.11.2014-ல் தியாகி மாடசாமியின் மகள் இந்திராவுக்கு பென்ஷன் வழங்கலாம் என்று நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னரும் அவருக்கு பென்ஷன் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் 4 முறை வழங்கியும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்கும் ஆவணங்களை அனுப்பி வைத்தும், கடந்த 8 ஆண்டுகளாக பென்ஷனுக்காகப் போராடி வருகிறார்.

இதுகுறித்து இந்திராவிடம் பேசினோம், ``ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தவறாமல் அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். மாவட்ட ஆட்சியரும் உரிய மரியாதை செய்கிறார். ஆனால், பென்ஷன் குறித்து கேட்டால், `நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மட்டும்தான் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அழைப்பிதழ்களுடன் இந்திரா
அழைப்பிதழ்களுடன் இந்திரா

என்னுடன் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் கைவிட்டு விட்டார்கள். ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துள்ளேன். இப்போ நான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுத்து 10 மாதத்துக்கு மேலாகிவிட்டது. பக்கத்தில் இருப்பவர்களும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சிலர் உதவி செய்வதால்தான் சாப்பாட்டுப் பிரச்னை இல்லை. கடந்த 8 வருஷமாகவே பென்ஷனுக்காக பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளேன்.

இதுவரை 4 முறை அனைத்து ஆவணங்களைக் கொடுத்த பின்னரும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், மீண்டும், மீண்டும் ஆவணங்களைக் கேட்டு அலைக்கழிக்கிறார்கள்” என்றார் வேதனையுடன்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா செயலாளர் செல்வம், ``இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான கடம்பூர் ராஜுவிடம் மனு அளித்துள்ளோம்.

பிற தியாகிகளின் வாரிசுகளுடன் இந்திரா
பிற தியாகிகளின் வாரிசுகளுடன் இந்திரா

விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார். அந்த நம்பிக்கையிலும் உள்ளோம். ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதைப் போல, தியாகிகளின் வாரிசுகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``இந்திராவிடம் கூடுதலாக சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்ததும். தொடர்ந்து பென்ஷன் வழங்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு