தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருப்பது, ஒகேனக்கல். இங்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகிறார்கள். ஆனால், இந்தப் பகுதிக்கு வந்து செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டிவந்தனர். இதுவரை அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மக்களின் உதவியோடு சாலையைச் சீரமைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சரவணன் கூறுகையில், "நாட்றாம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரை உள்ள மலைப்பகுதி மற்றும் காடுகளில் சாலைகள் அமைந்துள்ளன. இங்கு, மனிதர்களே பயணிக்க முடியாத அளவுக்கு சாலைகள் மோசமாக உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பாதையைத்தான் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் பயன்படுத்திவருகின்றனர். மலைப்பகுதியில் இருக்கும் கொண்டைஊசி வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பல சுற்றுலாப் பயணிகள் இறக்கின்றனர்.


வளைவுகளிலும், சாலையின் தடுப்புச் சுவர் சீராக இல்லை. இதனால் 16 கி.மீ சாலையைக் கடக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. இந்த ஆண்டு பெய்த மழையினால் அரைகுறையாக இருந்த சாலையும் அடித்துச்சென்றுவிட்டது. இந்த வழியாகச் செல்லும் தினசரிப் பேருந்துகளும் செல்லமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டபோது, காவல் துறையும் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, அரசை நம்பி பயனில்லை என மக்களுக்குப் புரியவைத்து, மக்களின் உதவியோடு மண்வெட்டி, கடப்பாரை போன்றவற்றை எடுத்துக்கொண்டு களத்திற்குச் சென்றோம்.

அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் மக்கள் செய்யும் வேலையை வேடிக்கை மட்டுமே பார்த்துவருகின்றனர். இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம், வாகனம் செல்ல முடியாத சாலைக்குக்கூட வரியை வசூலிக்கின்றனர். ஆனால், சாலை வசதியை மட்டும் முறையாகச் செய்துதருவதில்லை.
சாலையைச் சரிசெய்துகொண்டே அதற்கு ஆகும் செலவுக்கான பணத்தை உண்டியல் மூலம் திரட்டினோம். சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகளும், ஊர் மக்களும் தங்களால் இயன்ற அளவு பணத்தைக் கொடுத்து உதவி செய்தனர். முதலில் 10 பேர் மட்டுமே களத்திலிருந்தோம். பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் என 50-க்கும் மேற்பட்டோரின் உதவியுடன் சாலையைச் சீர் செய்தோம்.

தற்போது, சாலையில் மண்ணை மட்டுமே நிரப்பி சரி செய்துள்ளோம். அடுத்த மழை பொழிவதற்குள் அரசாங்கம் உதவி செய்தால்தான் உண்டு. இல்லையெனில், நாங்கள் சீர் செய்ததும் பயனற்றுப்போகும்" என்று வேதனை தெரிவிக்கிறார், சரவணன்.