Published:Updated:

`தபால் ஓட்டுகள் செல்லாமல் போனதன் பின்னணி என்ன?- கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்

`தபால் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக விழும். ஆனால், 60 சதவிகித வாக்குகள் செல்லாதவை என்று வந்திருப்பதால் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது'.

தபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு? -
தபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு? -

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான தபால் ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. சின்னத்தின் அச்சு தெளிவாக இல்லை என்றும் வேறுவேறு இடங்களில் மை இருப்பதாகச் சொல்லி 60 சதவிகித தபால் ஓட்டுகள் செல்லாது என்றிருக்கிறார்கள். ``இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறோம். எப்படி இவ்வளவு வாக்குகள் செல்லாமல் போனது" என்று அரசு ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள். இதன் பின்னணியில் அ.தி.மு.க அரசு திட்டமிட்டுச் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சில இடங்களில் தேர்தல் ஊழியர்களுக்குச் சரியான வசதிகள் செய்து தரவில்லையென்றும் காலை உணவு வழங்கப்படவில்லை என்றும் போராட்டங்கள் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதும் முதலில் தேர்தல் ஊழியர்களும் ஆசிரியர்களும் வாக்களித்த தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் 60 சதவிகித வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் ஆளும் கட்சியினரின் செயல்பாடு இருப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் தபால் ஓட்டுகள் மொத்தம் 74 எண்ணப்பட்டதில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 73 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகள். வாக்குச் சீட்டுகளுடன் உரிய ஆவணங்கள் இல்லாததாலேயே வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றியத்தில் 60 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் உரிய ஆவணங்கள் முறையாக இல்லாததால் 58 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வசதிகள் செய்து தரவில்லை என்று 
 வெளியேறிய அலுவலர்கள்
வசதிகள் செய்து தரவில்லை என்று வெளியேறிய அலுவலர்கள்
வீ.சிவக்குமார்

அடுத்ததாக திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கப் பதிலாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற வாக்குகள் உரிய ஆவணங்கள் இல்லை என்று மற்ற வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பதிவான 17 தபால் வாக்குகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பழநியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாவட்டங்களில் பல சிக்கல்களை அரங்கேற்றியிருப்பதாக ஆவேசப்படுகிறார்கள் அரசு ஊழியர்கள்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். ``தபால் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக விழும். ஆனால், 60 சதவிகித வாக்குகள் செல்லாதவை என்று வந்திருப்பதால் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. தபால் வாக்கு செலுத்தியவர்கள், சின்னத்தில் தெளிவாக அச்சிடப்படவில்லை என்றும், தவறாக இரண்டு மூன்று இடங்களில் அச்சிட்டுள்ளதால் அந்த வாக்குகளை நிராகரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

வசதிகள் செய்து தரவில்லை என்று வெளியேறிய அலுவலர்கள்
வசதிகள் செய்து தரவில்லை என்று வெளியேறிய அலுவலர்கள்
வீ.சிவக்குமார்

அரசு அதிகாரிகள் எல்லோரும் படித்தவர்கள்; விஷயம் தெரிந்தவர்கள். பலவருடங்களாக வாக்குச் சீட்டு முறையில் வாக்களித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் செல்லாத வாக்குகள் வந்ததற்கான காரணம் என்ன. அதேபோல் தேர்தலில் அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுப்பதில் பல்வேறு சிக்கல் நடந்தது. இதில் அ.தி.மு.க அரசு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பல்வேறு சந்தேகங்கள் எங்களுக்கு எழுகிறது. ஒரு சிலர் தவறு செய்வார்கள். அரசு ஊழியர்கள் 60 சதவிகிதம் பேர் தவறு செய்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்று ஆவேசப்படுகிறார்கள்.