Published:Updated:

`தபால் வாக்குகளைத் தனியாகத்தான் எண்ண வேண்டுமா?’ - உள்ளாட்சித் தேர்தல் கவலையில் அரசு ஊழியர்கள்

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, இத்தகைய நடைமுறையால் பிரச்னை இல்லை. ஆனால், இது ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளைத் தனியாக எண்ணினால் தங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என கவலை தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தங்களது வாக்குகளை தாங்கள் பணிபுரியும் ஊர்களில் இருந்தவாறே வாக்களிப்பது வழக்கம். வாக்கு எண்ணிக்கையின்போது இவைகள் தனியாக எண்ணப்படும். சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, இத்தகைய நடைமுறையை கடைப்பிடிக்கும்போது, இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

வாக்குச் சீட்டு
வாக்குச் சீட்டு
Representational Image

ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தங்களது நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். இவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகளைத் தனியாக எண்ணினால், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். இதனால் நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்களிடையே தங்களுக்கு பகை ஏற்படும். வேறு பல நெருக்கடிகளும் உருவாகும் என கவலை தெரிவிக்கிறார்கள். எனவே, தங்களது தபால் வாக்குகளை, வாக்குச்சாவடியில் பதிவாகியுள்ள மற்ற வாக்குகளுடன் ஒன்றாக கலந்து எண்ண வேண்டும் எனவும் இதுபோல் செய்தால், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும் என யோசனை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஏதேனும் முடிவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!