Published:Updated:

`எங்கள் வாக்கின் ரகசியம் காக்கப்படுமா?'- கோரிக்கை வைக்கும் அரசு ஊழியர்கள்!

எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக்கொள்ள முடியாது. எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல்களில் தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியிருக்கும். இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது அரசு ஊழியர்கள் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கப்படும் எங்கள் வாக்குகளின் ரகசியம் காக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் வராது என்றும் கூறுகின்றனர்.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளை தமிழகத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டத் தேர்தல் நாளையும், இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 30-ம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

ஊரக உள்ளாட்சிப் பதவிகளைப் பிடிப்பதற்காக வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. நாளை நடைபெற உள்ள தேர்தலுக்கான அந்ததந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் இன்று மாலையே வாக்கு மையத்திற்குச் சென்று தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்குத் தபால் மூலம் வாக்களித்து அதை சம்பந்தபட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்பிக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் போது அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் யாருக்கு வாக்களித்தோம் என வேட்பாளர்களுக்கோ அல்லது சம்பந்தபட்ட கட்சிகளுக்கோ தெரியாமல் ரகசியம் காக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை வைக்கின்றனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜனிடம் பேசினோம். ``ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அஞ்சல் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் வாக்களித்து விட்டு தேர்தல் பணிக்குச் செல்வது என்பது வழக்கமான நடைமுறைதான்.

ஆனால் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தல் போல் ஊரக உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக்கொள்ள முடியாது. எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தல்களில் தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியிருக்கும். இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது அரசு ஊழியர்கள் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாது.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதியில் தபால் முறையில் தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்கினைப் பதிவு செய்து அதைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தி விடுவார்கள்.

அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நாளில் அவை எடுக்கப்பட்டு சம்பந்தபட்ட ஒன்றியத்தின் வாக்குச் சாவடி மையத்திற்கு அனுப்பி விடுவார்கள். அங்கு தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கினைத் தனியாக எண்ணி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட நான்கு வாக்கினை யாருக்குச் செலுத்தியுள்ளார் என்பதை வேட்பாளர்களின் முகவர்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டு விடுவார்கள். அரசு ஊழியர்களின் வாக்குகள் பிரிந்து குறைந்த அளவிலேயே இருப்பதும் இதற்குக் காரணமாகிறது.

ரெங்கராஜன்
ரெங்கராஜன்

கடந்த காலங்களில் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் இவர் நமக்கு வாக்களிக்கவில்லை என்று பல வகையில் அரசு ஊழியர்களைப் புறக்கணித்த சம்பவம் பலருக்கு நடந்திருக்கிறது.

இது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். எனவே, தபால் வாக்குகள் எத்தனை பதிவாகியிருக்கின்றன என்ற விவரத்தை முகவர்களிடம் தெரிவித்து விட்டு அந்த வாக்குகளை முதலிலேயோ அல்லது கடைசியிலேயோ எனத் தனியாக எண்ணாமல் பதிவான வாக்கு சீட்டு பெட்டியில் போட்டு அதனுடன் சேர்த்தே தபால் வாக்குகளை எண்ண வேண்டும்.

தபால் வாக்கு
தபால் வாக்கு

அப்படிச் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற ரகசியம் காக்கப்படுவதுடன், யாருக்கு வாக்கினைப் பதிவு செய்தார் என்பதைக் கண்டுபிடிப்பதும் சிரமம். அத்துடன் அரசு ஊழியர்களுக்கு நாளைக்கு எந்தச் சிக்கலும் வராது. எனவே, இதைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.