Published:Updated:

`எல்லாம் குப்புசாமியின் கையில் இருக்கிறது!' - பரபரப்பை பற்ற வைத்திருக்கும் சுயேச்சை கவுன்சிலர்

எந்தக் கட்சிக்கு சேர்மன் பதவி கிடைக்கும் என்பது சுயேச்சையாகக் களமிறங்கிய குப்புசாமியின் கையில்தான் இருக்கிறது.

குப்புசாமி
குப்புசாமி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் இருக்கிறது குண்டடம் ஒன்றியம். இந்த ஒன்றியத்திலுள்ள 15 வார்டுகளுக்கு டிசம்பர் 30-ம் தேதி இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க., 5 வார்டுகளிலும், பா.ஜ.க., மற்றும் தே.மு.தி.க ஆகியவை தலா ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதேபோல, தி.மு.க 5 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 7-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கிய குப்புசாமி வெற்றி பெற்றார்.

குப்புசாமி எந்தக் கட்சிக்கு ஆதரவு தருகிறாரோ, அந்தக் கட்சி 8 யூனியன் கவுன்சிலரோடு சேர்மன் பதவியைப் பிடிக்கும்.

எந்தக் கட்சிக்கு 8 யூனியன் கவுன்சிலர்களின் ஆதரவு கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்குத்தான் சேர்மன் பதவி கிடைக்கும். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு சரிசமமாக தலா 7 யூனியன் கவுன்சிலர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றி பெற்ற 7-வது வார்டு கவுன்சிலர் குப்புசாமியின் கையில்தான் க்ளைமேக்ஸ் இருக்கிறது. அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவு தருகிறாரோ, அந்தக் கட்சி 8 யூனியன் கவுன்சிலரோடு சேர்மன் பதவியைப் பிடிக்கும்.

இதையடுத்து இருகட்சிகளும் குப்புசாமியிடம் ஆதரவு கேட்டு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தே.மு.தி.கவைச் சேர்ந்த குப்புசாமி தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றதால்தான் சுயேச்சையாகக் களமிறங்கினார். வெற்றியும் பெற்றார்.

பிரச்சாரத்தின் போது குப்புசாமி
பிரச்சாரத்தின் போது குப்புசாமி

எனவே, சீட் கொடுக்காத அ.தி.மு.க மீதான கோபத்தால் தி.மு.கவிற்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது சமாதானமாகி கூட்டணிக் கட்சி என்ற முறையில் அ.தி.மு.கவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.