Published:Updated:

`அ.தி.மு.க உறுப்பினர் கார்டுக்கு தி.மு.க-வில் சீட்?'- அறிவாலயத்துக்கு அதிர்ச்சிகொடுத்த ராமநாதபுரம்

ராமநாதபுரம் தி.மு.க
ராமநாதபுரம் தி.மு.க

`மாவட்ட செயலாளர் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் கொடுத்து வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் செயல்களை தலைமைக்கு தெரியப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம்.'

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க நிர்வாகம் தனது கைகளை விட்டு போன பின்னரும் சில ஒன்றியச் செயலாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முன்னாள் மாவட்டச் செயலாளரான சுப.த.திவாகரன். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

தி.மு.க வேட்பாளரின் அ.தி.மு.க உறுப்பினர் கார்டு
தி.மு.க வேட்பாளரின் அ.தி.மு.க உறுப்பினர் கார்டு

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக சுமார் 35 ஆண்டுகள் இருந்தவர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன். இடையில் இரு முறை அப்பதவியிருந்து மாற்றப்பட்ட போது அந்தப் பதவி தனது குடும்பத்தை விட்டு வெளியே செல்லாதவாறு பார்த்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்றில்தான் வெற்றி பெற்றது.

அதுவும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்குப் போனது. இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க தலைமை சுப.தங்கவேலன் மகன் சுப.த.திவாகரனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தது. மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்சாவின் மகன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து மாவட்ட தி.மு.க இரு அணிகளாக இயங்கி வருகிறது. இதனால் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் தனது ஆதரவாளர்களையும், கட்சியின் நிர்வாகிகளையும் ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க-வில் உறுப்பினர் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக முத்துராமலிங்கம் மீது புகார் வாசிக்கிறார் திவாகரன்.

முன்னாள் மாவட்ட தி.மு.க செயலாளர் திவாகரன்.
முன்னாள் மாவட்ட தி.மு.க செயலாளர் திவாகரன்.
உ.பாண்டி

இது குறித்து நம்மிடம் பேசிய திவாகரன், ``மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோயில் ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தி.மு.க-வின் கோட்டையாக உள்ள நயினார்கோயில் ஒன்றியத்தில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 9-வது வார்டில் அ.தி.மு.க-வில் உறுப்பினராக உள்ள பாலச்சந்திரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

இதேபோல் அ.தி.மு.க-வில் மாவட்ட நிர்வாகியாக உள்ள சிங்கத்துரை என்பவரின் மருமகளுக்கு சீட் கொடுத்துள்ளனர். இது மட்டுமல்ல ஆர்.எஸ்.மங்களம் ஒன்றியத்தில் முன்னாள் ஒன்றிய சேர்மன் நல்லசேதுபதியின் தம்பிக்கு சீட் வழங்கியுள்ளனர். இவரும் அ.தி.மு.க காரர்தான். இதே நிலைதான் மாவட்டம் முழுமைக்கும் உள்ளது. மாவட்ட செயலாளர் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் கொடுத்து வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் செயல்களை தலைமைக்கு தெரியப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு சீட் கொடுத்தது குறித்து அமைப்புச் செயலாளர் மூலம் கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.

மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளர் தேர்வு குறித்து எழுந்துள்ள குழப்பத்தினால் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி பறிபோய் விட்டதாகக் கட்சி தலைமைக்குப் புகார் தட்டியிருக்கும் திவாகரனின் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தரப்பில் பேசினோம். அவர்கள் நம்மிடம், ``மாவட்டம் முழுமைக்கும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர்கள் குறித்து ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுகளும், கட்சிக்காரர்களின் கருத்தும் ஒன்றாக இருக்கும் நிலையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தி.மு.க வேட்பாளரின் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை
தி.மு.க வேட்பாளரின் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை
உ.பாண்டி

நயினார்கோயில் ஒன்றியத்தைப் பொறுத்தமட்டில் 9 வார்டுகளில் 5 வார்டுகளை திவாகரன் தரப்பினருக்கும் 4 வார்டுகளை ஒன்றியச் செயலாளர் தரப்பிற்கும் ஒதுக்கினோம். ஒரு கட்டத்தில் 7 வார்டுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

ஆனால், இதை ஏற்க மறுத்த திவாகரன் தரப்பினர் தாங்கள் சொல்பவர்களையே 9 வார்டுகளிலும் நிறுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் ஒன்றியச் செயலாளரின் பரிந்துரையுடன் 9 வார்டுகளுக்கும் கட்சியின் விசுவாசிகளை வேட்பாளர்களாக மனுத் தாக்கல் செய்ய வைத்தோம்.

தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம்.
தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம்.
உ.பாண்டி

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திவாகரன் தரப்பினர் போலியான அ.தி.மு.க உறுப்பினர் அட்டைகளைத் தயார் செய்து தலைமைக்கு அனுப்பியுள்ளனர். உண்மையில் பாலச்சந்திரன் பரம்பரை தி.மு.க காரர். ஏற்கெனவே, இவர்களது செயல்பாட்டால்தான் பரமக்குடி தொகுதியில் தோற்றோம். இப்போதும் அதே காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு இடம் கொடுக்கமாட்டோம். இவர்களது உள்ளடி வேலைகளை தாண்டி நிச்சயம் தி.மு.க-வை வெற்றி பெற வைப்போம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு