Published:Updated:

`மாற்றப்பட்ட முதல்வர் படம்!' - தலைஞாயிறு ஒன்றியக் குழு கூட்டத்தில் சர்ச்சை

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டம் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வரவேற்றார். தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் பழ.பக்கிரிசாமி வாசித்தார்.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி அறையில் இருந்த தமிழக முதல்வரின் படம் அதே அறையில் வேறு இடத்தில் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இருப்பதைக் கண்டித்து, முதல்வரின் படத்தை உரிய இடத்தில் மாட்ட வேண்டும் என அ.தி.மு.க, தி.மு.க-வினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கூட்ட அறையில் அ.தி.மு.க-வினர் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்பு, தமிழக முதல்வரின் படம் உரிய இடத்தில் வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் கூட்டம் தொடங்கப்பட்டது.

கூட்டத்தில் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திட்ட அரசாணையைத் திரும்பப் பெற்று, காவேரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அறிவித்திட மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

தலைஞாயிறு ஒன்றியத்தில் சூரிய சக்தியுடன்கூடிய பசுமை வீடுகள் கட்டுதல், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அங்கன்வாடி கட்டட பழுதுநீக்கம் உள்ளிட்ட பணிகள் செய்திடவும், தலைஞாயிறு பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், வரும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தலைஞாயிறுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரை குறைக்காமல் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின் செல்ல