Published:Updated:

`ஆளும்கட்சியால் வளைக்கப்பட்ட வேட்பாளர்கள்!'- அதிர்ச்சியில் கரூர் மாவட்ட அ.ம.மு.க

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர்களை அ.தி.மு.க-வுக்கு இழுத்து, கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறார், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அ.தி.மு.க தாவிய அ.ம.மு.க வேட்பாளர்கள்
அ.தி.மு.க தாவிய அ.ம.மு.க வேட்பாளர்கள் ( நா.ராஜமுருகன் )

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டபோது, தமிழகம் முழுக்க அ.ம.மு.க-வுக்கு அபரிதமான செல்வாக்கு இருந்தது. அதன்பிறகு, அ.தி.மு.க கட்சியும், இரட்டை இலை சின்னமும் தினகரன் தரப்புக்கு கிடைக்காமல் போக, சோர்ந்து போன தொண்டர்கள் மாற்றுக் கட்சிகளுக்குத் தாவத் தொடங்கினார்கள். அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த வருட தொடக்கத்தில் தி.மு.க-வுக்குத் தாவினார். அப்போது, அவருடன் 30,441 பேர் தி.மு.க-வில் இணைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் அ.ம.மு.க தொண்டர்கள்தான். இதனால், அ.ம.மு.க தலைமை ஆடிபோனது. மாவட்டச் செயலாளராக தங்கவேல் என்பவரை நியமித்தார், டி.டி.வி.தினகரன். இன்னொருபக்கம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் இருந்த அ.ம.மு.க-வினர்களை அ.தி.மு.க-வுக்குத் தொடர்ந்து இழுத்துப்போட்டார். தங்கவேல் செய்வதறியாது நின்றார். தமிழகத்திலேயே அ.ம.மு.க தேய்ந்துபோன நிலாவாக ஆனது கரூர் மாவட்டத்தில் என்று அ.ம.மு.க தொண்டர்கள் புலம்பிவந்தனர். இந்த நிலையில்தான், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூட அ.ம.மு.க தொண்டர்கள் பலரும் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்பட்டது.

Vikatan
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இருந்தாலும், மாவட்டச் செயலாளர் தங்கவேல் வேட்பாளர்களை அறிவித்து, வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானார். இந்த நிலையில்தான், கரூர் மாவட்ட அ.ம.மு.க விவசாய அணிச் செயலாளரும், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு 4-வது வார்டு வேட்பாளருமான பாஸ்.பிரபு என்பவரையும், குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு வேட்பாளரும், கிளைக் கழகச் செயலாளருமான மாரியாயி பாலகிருஷ்ணன் என்பவரையும் அ.தி.மு.க-வுக்கு அழைத்துவந்து, அ.ம.மு.க-வினர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறார், எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர்களோடு, அ.ம.மு.க-வின் திம்பம்பட்டி ஊராட்சி கழகச் செயலாளர் ஆர்.பி.அறிவழகன் என்பவரும் அ.தி.மு.க-வில் இணைந்துகொண்டார். `தேர்தல் நடப்பதற்குள் இன்னும் பல வேட்பாளர்களை அ.தி.மு.க-வுக்குள் இழுத்துப்போடுவது' என்ற அசைன்மென்டோடு அ.தி.மு.க-வினர்களை களத்தில் இறக்கிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களிடம் பேசினோம். ``செந்தில் பாலாஜி அ.ம.மு.க-வில் இருந்தவரைக்கும் தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க செல்வாக்காக இருந்துச்சு. அவர் தி.மு.க-வுக்குப் போனபோது, ஒரு பெரும்படையையே தி.மு.க-வுக்கு அழைத்துப்போனார். அதனால், அ.ம.மு.க இங்கே கரைய ஆரம்பிச்சுச்சு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேறு தன்பங்குக்கு கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களை அ.தி.மு.க-வுக்கு அழைத்துப்போனார். இதனால், துடுப்பில்லாத ஓடமாக கரூர் மாவட்ட அ.ம.மு.க தள்ளாட ஆரம்பிச்சுச்சு.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

மாவட்டச் செயலாளர் தங்கவேல் கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போகத் தொடங்கிய கட்சியை காப்பாற்ற முயன்றார். ஆனால், முடியவில்லை. இப்போது, ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாக தொண்டர்கள், கட்சி பொறுப்பாளர்களை இழுத்த கதை மாறி, இப்போது அ.ம.மு.க வேட்பாளர்களையே அ.தி.மு.க-வுக்கு இழுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க டி.டி.வி.தினகரன்தான் ஏதாச்சும் பண்ணனும்" என்றார்கள்.