Published:Updated:

`4,905 வேட்புமனுக்கள்; களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள்!’- களைகட்டும் கரூர் உள்ளாட்சித் தேர்தல்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி, எட்டு கோடியே, தொன்னூறு லட்சம் சொத்துமதிப்பு காட்டியுள்ளார்.

சாந்தி சேகர் வேட்புமனுத் தாக்கல்
சாந்தி சேகர் வேட்புமனுத் தாக்கல்

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலில், மொத்தம் 4,905 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்து மதிப்பும் கேட்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் பல கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

வேட்புமனுத்தாக்கல்
வேட்புமனுத்தாக்கல்
`மேலோகத்தில்தான் வெற்றிடம் உள்ளது!' -கரூரில் `திடீரென' தலைகாட்டிய தம்பிதுரை

நேற்றுதான் கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு இறுதி நாள் என்பதால், வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றன. 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று மட்டும் 62 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், 115 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நேற்று 471 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தமுள்ள 157 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நேற்று மட்டும் 335 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 1,401 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று மட்டும் 1,585 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

சாந்தி சேகர்
சாந்தி சேகர்

மொத்தமாக கடந்த 7 நாள்களாக கரூர் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, 4,905 ஆகும். தொடர்ந்து, இன்று மதியம் 1 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பின்னர் மனுக்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் அதன்பிறகே, அதிகாரிகளால் வெளியிடப்படவுள்ளது.

இதுவரை, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போதுதான் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும் என்கிற நடைமுறை இருந்தது. அந்த நடைமுறை வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக சில கோடீஸ்வர வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்தி போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அவர் தனது சொத்து மதிப்பாக ரூ 8.90 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்

அதேபோல், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் கருணாகரன், தனக்கு இரண்டு கோடியே, இருபத்து ஐந்து லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். அதேபோல், சுப்பையா என்பவர், ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் ரூபாய்க்கு சொத்து மதிப்பு காட்டியுள்ளார். இதே பஞ்சாயத்தில் போட்டியிடும் வேட்பாளர் லீலா என்பவர், இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு காட்டியுள்ளார். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செந்தில் பாலாஜியும் வாக்கு சேகரிப்பை தொடங்கிவிட்டனர்.