Published:Updated:

அச்சம் இல்லை, லஞ்சம் இல்லை! - வழிகாட்டும் கம்பூர்

கம்பூர்
பிரீமியம் ஸ்டோரி
கம்பூர்

அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இந்த ஊராட்சியில்?

அச்சம் இல்லை, லஞ்சம் இல்லை! - வழிகாட்டும் கம்பூர்

அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இந்த ஊராட்சியில்?

Published:Updated:
கம்பூர்
பிரீமியம் ஸ்டோரி
கம்பூர்

வெற்று அரட்டைகள், வீண் விவாதங்கள் என சமூக ஊடகங்கள் நிரம்பிவழியும் காலமிது. அதே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஊராட்சியை முன்னுதாரண ஊராட்சியாக மாற்றிச் சாதித்திருக்கிறார்கள் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் ராஜீவ்காந்தி அறக்கட்டளை, முன்மாதிரி மக்கள் வாழும் ஊராட்சியாக இதை அங்கீகரித்துப் பாராட்டியுள்ளது.

மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டியை ஒட்டியிருக்கிறது கம்பூர் ஊராட்சி. சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கும் இந்த ஊராட்சியில் ஒன்பது கிராமங்கள் அடக்கம். வேளாண்மைதான் முதன்மைத் தொழில். சிலர் குவாரி வேலை, கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். சில குடும்பங்கள் வெளிநாடுகளில் வேலைசெய்யும் பிள்ளைகளை நம்பி வாழ்கின்றன. பெரும்பாலானோர் முதல் தலைமுறையாக இப்போதுதான் பட்டப்படிப்பை எட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இந்த ஊராட்சியில்?

“எல்லா கிராமங்களிலும் இருக்கிற பிரச்னைகள்தான் சார்... ஆனா, ஆளாளுக்கு பிரச்னை, பிரச்னைன்னு பேசினா எல்லாம் சரியாகிடுமா? நாமளே தீர்வை நோக்கிப் போகணும்னு முடிவு செஞ்சோம். எல்லாத்துக்கும் அடிப்படை, ஊராட்சி நிர்வாகம்தான். நாடாளுமன்றத்துக்கு என்ன அதிகாரமோ அதே அளவுக்கு ஊராட்சிக்கும் அதிகாரமிருக்குன்னு சொல்வாங்க. உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மக்களும் பக்கபலமா இருந்தாங்க. ஒரு கட்டத்துல எங்க கிராமத்துப் பேரைச் சொன்னா அதிகாரிகள் இயல்பாவே அவங்க வேலையைச் சரியா செஞ்சிடுற நிலை வந்திருச்சு...’’ உற்சாகமாக நம்மை வரவேற்றபடி பேசுகிறார் செல்வராஜ்.

கம்பூர்
கம்பூர்

சென்னையில் கூட்டுறவுத்துறையில் பணி கிடைத்தும் சேராமல், இளைஞர் அமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறார் செல்வராஜ்.

‘`நாங்களும், `எங்க குடும்பம்’, `எங்க எதிர்காலம்’னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தோம். 2012-ல அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை ஊர்ல கொண்டாடினோம். சம்பிரதாயமா போட்டோ வெச்சு மாலை போடுறதா இல்லாம, ஊரைச் சுத்தம் பண்ணுறது, மரக்கன்றுகளை நடுறதுன்னு சில விஷயங்களைத் திட்டமிட்டோம். அந்த நிகழ்ச்சிக்கான உரையாடல்கள்தான் இந்த விஷயங்களுக்கெல்லாம் விதையா அமைஞ்சுது. எல்லாரும் ஒருங்கிணைஞ்சு நின்னு ஊருக்கு ஏதாவது செய்யணுங்கிற எண்ணம் வந்துச்சு. தொடக்கத்திலேயே சாதி, மதம், அரசியல் சாயங்கள் ஏதும் மேல படிஞ்சிடக்கூடாதுன்னு உறுதியா முடிவு செஞ்சுட்டோம்.

பெரும்பாலும் கிராமசபைக் கூட்டத்துக்கு அதிகாரிகளே வருவதில்லை. வந்ததுமாதிரி கணக்கு காமிப்பாங்க. ஆனா எங்க ஊர்ல சமீபத்தில நடந்த கிராமசபைக் கூட்டத்துக்கு 25 அதிகாரிகள் வந்திருந்தாங்க. எங்க ஊராட்சி மக்கள் எந்த அரசு அலுவலகத்திலேயும் லஞ்சம் கொடுக்க மாட்டாங்க. தகவல் உரிமைச் சட்டத்தை முழுமையாப் பயன்படுத்துறோம். எல்லா நிலை அதிகாரிகள்கிட்டேயும் மக்கள் தயக்கமோ பயமோ இல்லாம கேள்வி கேட்கத் தொடங்கிட்டாங்க. அதனால முறைப்படி எங்க ஊருக்குத் திட்டங்கள் ஒதுக்கப்படுது. பணிகள் தரமா நடக்குது’’ என்கிறார் செல்வராஜ்.

ஊரில் அத்தனை குடும்பங்களையும் உள்ளடக்கி வாட்ஸப் குழுக்கள் இயங்குகின்றன. அதில் அரசு அறிவிப்புகள், திட்டங்கள், வேலை வாய்ப்புகள், கல்வி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மக்கள் தங்கள் பிரச்னைகளையும் அதில் பேசுகிறார்கள். பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாகத் தீர்வையும் காண்கிறார்கள்.

PRIASoft என்ற மத்திய அரசின் இணையதளத்தில் (https://accountingonline.gov.in) ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கப்படும் நிதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கம்பூர் ஊராட்சியின் பெரும்பாலான மக்கள் அந்த இணையதளத்தைத் தினமும் பார்த்துத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

கம்பூர் கிராம மக்கள்
கம்பூர் கிராம மக்கள்

“உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, நாங்க எல்லா வேட்பாளர்களுக்கும் பொதுவா நோட்டீஸ் ஒட்டினோம். எல்லாரையும் உக்காரவச்சு, ‘அதிகம் செலவு பண்ணி ஜெயிச்சு பின்னால சம்பாதிக்கலான்னு நினைக்காதீங்க... ஆர்.டி.ஐ மூலம் கணக்கு கேட்போம். விதிகளை மீறியிருந்தா பதவி இழக்க நேரிடும்’னு நேரடியாவே சொன்னோம். அந்தப் புரிதலோடு தலைவர்களை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்’’ என்கிறார் செல்வராஜ்.

“சின்னப்பசங்க ஏதோ பண்ணுறாங்க, இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுதான் தோணுச்சு. ஆரம்பத்துல யாரும் பெருசா எடுத்துக்கல. ஆனா, இன்னைக்கு பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. எங்க ஊரைப்பத்தி பல இடங்களில் பேச ஆரம்பிச்சிருக்காங்க. அதிகாரிகள்கிட்ட ஊர்ப் பேரைச் சொன்னா மரியாதை வந்திருக்கு. அவங்கவங்க பிரச்னைகளை அவங்கவங்களே பேசுறாங்க. குறிப்பா பெண்கள் தைரியமா பேசத்தொடங்கியிருக்காங்க. யாரும் லஞ்சம் கொடுக்கிறதில்லை. இடைத்தரகர்களுக்குப் பிழைப்பு இல்லாமப்போயிருச்சு. இதற்கெல்லாம் காரணம் இந்த இளைஞர்கள்தான்’’ என்று பெருமிதமாகச் சொல்கிறார்கள் கம்பூர் பகுதியைச் சேர்ந்த பெரியவர் அழகு.

சமீபத்தில் ஊராட்சிக்குட்பட்ட ஒரு ரேஷன் கடையில், எடை குறைவாகப் பொருள் கொடுக்கப்பட, அதை வாட்ஸப்பில் ஒருவர் போட, அடுத்த அரைமணி நேரத்தில் மக்கள் ரேஷன் கடையில் குவிந்துவிட்டார்கள். அதிகாரிகள் தலையிட்டு, உடனே ரேஷன் கடை பொறுப்பாளரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் புவியியல் துறையினர், கம்பூர் ஊராட்சியை ஒட்டிய மலைப்பகுதிகளில் ஏதோவொரு திட்டத்துக்காக ஆய்வு செய்திருக்கிறார்கள். உடனடியாகச் செய்தி பரப்பி மலையையே முற்றுகையிட்டுவிட்டார்கள் மக்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திகைக்க, காவல்துறை சமாதானப்படுத்தி அதிகாரிகளை மீட்டு அனுப்பியிருக்கிறது. ‘ஊராட்சியின் அனுமதியில்லாமல் இங்கு இனி எந்த ஆய்வையும் நடத்தக்கூடாது’ என்று கிராமசபையைக் கூட்டி உடனே தீர்மானத்தையும் நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்த்திருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கேள்விப்பட்டு, கள ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பூர் கிராமத்துக்கே வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘விழிப்புணர்வு கொண்ட மக்கள் நிறைந்த ஊராட்சி’ என்றும், ‘ஆளுமைத்திறன் மிக்க இளைஞர்கள் இங்கு உருவாகிறார்கள்’ என்றும் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதிகார மட்டத்திலிருந்து தொடங்குவதல்ல மாற்றங்கள். அதிகாரத்தின் வேர்களான மக்களிடமிருந்தே தொடங்கவேண்டும். கம்பூர் நல்லதொரு மாற்றத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.