Published:Updated:

`நீங்கதான் எங்களுக்கு ஆடுகளை வாங்கித் தரணும்!'- காந்தி சிலையிடம் விநோத மனு அளித்த கரூர் மக்கள்

காந்தி சிலையிடம் மனு அளிக்கும் மக்கள்
காந்தி சிலையிடம் மனு அளிக்கும் மக்கள்

``எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நீங்கதான், ஏழைபாழைகளான எங்களுக்கு அரசாங்கத்துக்கிட்ட இருந்து ஆடுகளை வாங்கித்தரணும்" என்று மக்கள் காந்தி சிலையிடம் விநோதமாக மனு அளித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, ராஜேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருக்கும் வாலாந்தூர் கிராமத்தில், 700 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள். இந்த நிலையில், தமிழக அரசு வழங்கும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், இந்த கிராமத்தில் வசிக்கும் 30 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க, டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ``அவர்கள் அனைவரும், ஏழ்மை நிலையில் உள்ள தகுதியான நபர்கள் கிடையாது. அந்த 30 பேரும் வசதி படைத்தவர்கள் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்" என்று பாதிக்கப்பட்ட மக்கள் அதிரடியாகக் குற்றம்சாட்டினர்.

காந்தி சிலையிடம் மனு
காந்தி சிலையிடம் மனு

இந்த நிலையில்தான், ``தகுதியான பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குளித்தலை ஒன்றிய கிராம ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையற்கரசியைப் பார்த்து மனு அளித்தனர். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்களது மனுவை வாங்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த மக்கள், ஒன்றிய அலுவலகம் முன்பு இருக்கும் மகாத்மா காந்தி சிலையிடம், ``நீங்களாவது எங்களுக்கு ஆடுகளை வாங்கிக் கொடுங்கள்" என்று விநோதமான முறையில் மனுகொடுத்து, பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான முத்துச்செல்வன், ``விலையில்லா ஆடுகள் வழங்க வாலாந்தூரில் கொடுக்கப்பட்ட 30 டோக்கன்களைப் பெற்றவர்களில் ஒருவர்கூட, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பயனாளி கிடையாது. வசதி படைத்தவர்கள் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம் அந்த முப்பது பேரும். இந்த முறைகேட்டை அங்கிருக்கும் ஆளுங்கட்சிப் புள்ளிகள்தான் செய்தார்கள்.

இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும், பாதிக்கப்பட்ட மக்கள் 40 பேர்களை அழைத்துக்கொண்டு, குளித்தலை ஒன்றிய கிராம ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையற்கரசியைப் பார்க்கச் சென்றோம். மக்களின் கோரிக்கையை மனுவா எழுதிட்டுப் போய், அவர்கிட்ட கொடுத்தோம்.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்

ஆனால் அவர் அசால்ட்டா, `மனுவை வாங்க எனக்கு அதிகாரம் கிடையாது'னு வேண்டா வெறுப்பா சொன்னார். நாங்க அதுக்கு, `நீங்கதான் அதிகாரி. நீங்களே வாங்கலன்னா, வேற யாருகிட்ட நாங்க கொடுக்கிறது?'னு கேட்டோம். அதுக்கு அவர், `கால்நடை மருத்துவர்கிட்ட கொடுங்க'னு சொன்னார். அதைக் கேட்டு எங்களுக்கு அழுவதா, சிரிப்பதானு தெரியலை. 'ஆடுங்களுக்கு உடம்புக்குச் சரியில்லன்னா, கால்நடை மருத்துவர்கிட்ட போகலாம்.

20 பிரச்னைகள்... 24 பொது வேட்பாளர்கள் தயார்

ஆடுகள் வழங்குறதுல நடக்குற முறைக்கேட்டைத் தடுக்க மனு கொடுக்க அவர்கிட்ட எப்படி போகமுடியும்?'னு கேட்டோம். அதுக்கு அவர், `நான் மனுவை வாங்க முடியாது'னு எங்ககிட்ட வாக்குவாதம் பண்ணினார். விடாத நாங்க, 'நீங்க வாங்கலன்னாலும், இதுக்கு யாரு அத்தாரிட்டியோ அவங்ககிட்ட மனுவை அனுப்பி வைங்க'னு சொன்னோம். ஆனால், `சந்தைக்கடையாட்டம் சத்தம் போடாம வெளியே போங்க. இல்லைன்னா, நடக்குறதே வேற'னு மிரட்டினாங்க.

பி.டி.ஓ மங்கையற்கரசி வாக்குவாதம்
பி.டி.ஓ மங்கையற்கரசி வாக்குவாதம்

அதனால், குளித்தலை ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள காந்தி சிலையிடம் நாங்க வைத்திருந்த மனுவைக் கொடுத்தோம். `நீங்கதான் எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தீங்க. இப்போ ஆடுகள் வழங்குறதுல முறைகேடு நடக்குது. அந்த முறைகேட்டை முறியடித்து, எங்களுக்கு ஆடுகளை வாங்கித் தாங்க'னு கோரிக்கை வச்சுட்டு, அங்கிருந்து கிளம்பினோம். உரிய பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படணும். இல்லைன்னா, தொடர்ப் போராட்டங்களால் குளித்தலைப் பகுதியை ஸ்தம்பிக்க வைப்போம்" என்றார்.

குளித்தலை ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையற்கரசியிடம் பேச முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. எனினும் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சில அதிகாரிகள், "அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டிய ஆள்களுக்கு ஆளுங்கட்சியினர் விலையில்லா ஆடுகளை வழங்கிக்கொள்கிறார்கள். இதுல அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

காந்தி சிலையிடம் மனு அளிக்கும் மக்கள்
காந்தி சிலையிடம் மனு அளிக்கும் மக்கள்

அப்படியே துணிச்சலா சில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயன்றாலும், 'அமைச்சர் ஆபீஸிலிருந்து பேசுகிறோம். ஒழுங்கா நாங்க கைகாட்டுற ஆளுங்களுக்கு ஆடுகளைக் கொடுங்க. இல்லைன்னா, அவ்வளவுதான்'னு யார் யாரோ மிரட்டல் தொனியில் பேசுறாங்க. எங்களால அதை மீறி என்ன பண்ண முடியும்?" என்று தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள்.

பின் செல்ல