Published:Updated:

`இந்த 20 பிரச்னைகளை தீர்க்கணும், இல்லனா..!’- குளித்தலை இளைஞர்களின் உள்ளாட்சி மிரட்டல்

`இந்தப் பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலன்னா, வரும் உள்ளாட்சித் தேர்தலில், குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் இளைஞர்கள் நாங்கள் பொதுவேட்பாளர்களாக களமிறங்குவோம்'னு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதைத் தமிழக அரசின் கவனத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

குளித்தலை இளைஞர்கள்
குளித்தலை இளைஞர்கள் ( நா.ராஜமுருகன் )

``குளித்தலை நகராட்சியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய 20 பிரச்னைகளை, இந்த அரசு உடனே தீர்க்கணும். இல்லைன்னா, இளைஞர்களாகிய நாங்களே குளித்தலை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளிலும் பொதுவேட்பாளர்களை நிறுத்தி, அரசியல் கட்சிகளுக்கு டஃப் ஃபைட் கொடுப்போம்" என்று குளித்தலை இளைஞர்கள் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றி, அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

குளித்தலை இளைஞர்கள்
குளித்தலை இளைஞர்கள்
நா.ராஜமுருகன்
Vikatan

குளித்தலைப் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் பெரியார் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், குளித்தலை நகரின் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குளித்தலை இளைஞர்கள்
குளித்தலை இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

அதோடு, `குளித்தலை நகராட்சியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்..' என்று இருபது பிரச்னைகள் குறித்து அரசுக்குக் கோரிக்கை வைத்ததோடு, 'இதை உடனடியாக நிறைவேற்றணும். இல்லைன்னா, வரும் உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்கள் பொதுவேட்பாளர்களாக களத்தில் இறங்குவோம்' என்று அதிரடி தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதைத் தமிழக அரசின் கவனதுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதுசம்பந்தமாக, குளித்தலைப் பகுதி இளைஞரான சுந்தரிடம் பேசினோம், ``குளித்தலை ஒரு நகராட்சி. ஆனால், இங்கே எந்த ஒரு திட்டமும் உருப்படியா நிறைவேற்றப்படவில்லை. நகராட்சியாகக் குளித்தலை தரம் உயர்த்தப்பட்டு, 25 ஆண்டுகளாயிட்டு. ஆனா, இங்கே நிரந்தரப் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இந்த நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன்கூடிய நவீனப் பேருந்து நிலையம் உருவாக்கப்பட வேண்டும். குளித்தலை நகரில் தீயணைப்பு நிலையம் இல்லை. அதேபோல, குளித்தலை நகரில் துணை மின் நிலையம் இல்லாமல் இருக்கிறது. குளித்தலை நகரத்துக்கு எனத் தனியாக விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கிறது. மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்
சுந்தர்
நா.ராஜமுருகன்

உருப்படியாக இந்தப் பகுதியில் எந்தச் சுற்றுலா தலமும் இல்லை. கடம்பர்கோயிலைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத் தொழிலை முதன்மையாகக் கொண்ட பகுதிகள். அதனால், விவசாயம் சார்ந்த புதிய தொழிற்சாலைகள், குளித்தலை நகரில் உருவாக்கப்பட வேண்டும். பழைய ஓட்டை உடைசல் கட்டடத்தில்தான், குளித்தலை நகராட்சி இயங்கி வருகிறது. அதனால், நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டித் தரப்படவேண்டும்.

கடம்பர் கோயில் காவிரி ஆற்றுப்பகுதியில், புதிய பூங்கா அமைத்து உயர்மின் கோபுர விளக்கு ஆற்றுப்பகுதியில் அமைத்து தரவேண்டும். வாரச் சந்தைக்குத் தனியாக இடம் கொடுத்துஅனைத்து வசதியுடைய வாரச்சந்தை உருவாக்கப்படவேண்டும். குளித்தலை நகரத்திலுள்ள ஒன்றிய அரசுப்பள்ளிகளை நகராட்சி பள்ளிகளாக மாற்ற வேண்டும். வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளையும் குளிர்பதனக் கிடங்குகளையும் ஏற்படுத்த வேண்டும். குளித்தலைப் பகுதியில் எந்தத் தொழில் வளர்ச்சியும் இல்லாததால், அருகிலுள்ள கரூர் மற்றும் திருச்சிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி வேலைக்குச் சென்று வருகின்றனர்.

தீர்மான நகலோடு குளித்தலை இளைஞர்கள்
தீர்மான நகலோடு குளித்தலை இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

குளித்தலைப் பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்கி, இங்குள்ள இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இப்படி 20 பிரச்னைகள் பற்றி விவாதித்தோம். `அவற்றை உடனே தமிழக அரசு தீர்க்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதோடு, `இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலன்னா, வரும் உள்ளாட்சித் தேர்தலில், குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் இளைஞர்கள் நாங்கள் பொதுவேட்பாளர்களாகக் களமிறங்குவோம்'னு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதைத் தமிழக அரசின் கவனத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றார்கள்.