Published:Updated:

“பா.ம.க-வின் தயவும்... அ.தி.மு.க வெற்றியும்!” - உள்ளாட்சி உற்சாகத்தில் பா.ம.க.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பா.ம.க தனது வாக்கு வங்கியை வைத்து அரசியல் சதுரங்கத்தை ஆட ஆரம்பித்துள்ளது. இனி அ.தி.மு.க கூட்டணிக்குள் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில்தான் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பா.ம.கவின் வெற்றிக்கு உழைத்த அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி” என உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
தே.சிலம்பரசன்

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பாக அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் “பா.ம.க கூட்டணியில் இடம்பெற்றிருக்காவிட்டால் அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்திருக்காது. அந்த கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதாலேதான் இடைத்தேர்தலில் பா.ம.க விட்டுக்கொடுத்தது. அந்தக் கூட்டணி தர்மத்தை மறந்து உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஒரு சீட், அரை சீட், கால் சீட் என்று தருவது வருத்தத்தைத் தருகிறது” என்று அ.தி.மு.க-வுக்கு எதிராக இவர் பேசியது பா.ம.க தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், அ.தி.மு.க தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது. அன்புமணி பேசிய சில நாள்களிலே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி அதே அ.தி.மு.கவுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர். குறிப்பாக அ.தி.மு.க, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பகுதிகள் அதிகம் என்றால் கொங்கு மண்டலமும், பா.ம.க வலுவாக இருக்கும் மாவட்டங்களிலும் என்பதை இப்பொது கோடுபோட்டு காட்டுகிறார்கள் பா.ம.கவினர்.

பா.ம.க தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மீண்டும் நிரூபணம் செய்திருக்கிறது. ஆனால், எங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய விதத்தில் அ.தி.மு.க பயன்படுத்தியிருந்தால் இன்னும் கூடுதல் வெற்றியை அந்த கூட்டணி பெற்றிருக்கும் என்று சில காரணங்களைச் சொல்கிறார்கள் பா.ம.க நிர்வாகிகள். “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது பா.ம.க. அந்த தேர்தலில் நாங்கள் எதிர்பாராத அளவுக்கு தோல்வியடைந்தற்கு மோடி எதிர்ப்பு அலையும் ஒரு காரணம். ஆனால், அதே நேரத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அவர்கள் வெற்றி பெற்ற ஒன்பது தொகுதிகளிலும் கணிசமான தொகுதிகள் பா.ம.க வலுவாக உள்ள மாவட்டங்களில் பெற்றிருந்தார்கள். பா.ம.கவினரின் உழைப்பை அதற்கு பிறகு தொடர்ந்து உதாசீனப்படுத்தியது அ.தி.மு.க

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

அதே நேரம் விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் பா.ம.க தயவை அ.தி.மு.க எதிர்பார்த்தது. அந்தத் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் அன்புமணி. அந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு அன்புமணியிடம் 'உங்கள் ஒத்துழைப்பு உள்ளாட்சி தேர்தலிலும் வேண்டும், உங்களுக்கு உரிய மரியாதை செய்யப்படும்' என்று உறுதி கொடுத்தார்கள்.மொத்த இடங்களில் இருபது சதவிகித இடங்கள் பா.ம.கவுக்கு வழங்கப்படும் என்று அ.தி.மு.க தரப்பில் சொல்லியிருந்தனர். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான நிலைப்பாட்டை அந்த கட்சி நிர்வாகிகள் கையில் எடுத்தனர்.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில், எங்களை மதித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் கேட்டதைத் தரவில்லை என்றாலும் நாங்கள் வருத்தப்படாத அளவிற்கு சீட்களை வழங்கினார்கள். செலவுக்கும் கணிசமான அளவுக்கு அ.தி.மு.க தரப்பு எங்களுக்கு உதவி செய்தது. அதே போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க வினர் ஓரளவாவது எங்களுக்கு சீட் வழங்கினார்கள். அதே நேரம் பா.ம.க வலுவாக உள்ள திருவள்ளுர் மாவட்டத்தில் எங்களை முற்றிலும் புறக்கணித்தனர். கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட அங்கிருந்த அ.தி.மு.க வினர் முறையாக நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த எங்கள் கட்சி நிர்வாகிகள் தனியாக களத்தில் நின்றனர். அந்த மாவட்டத்தில். இதனால் தேர்தல் களமே தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என்று பிளவுப்பட்டு நின்றது. அதன் விளைவு இப்போது அ.தி.மு.க உணர்ந்துள்ளது. எளிதாக வெற்றிபெற வேண்டிய அ.தி.மு.க அந்த மாவட்டத்தில் மண்ணை கவ்வி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்
`3 பேர் சேர்ந்து நடத்தும் கூட்டுச்சதி இது’ -பேரணாம்பட்டு பேருந்துநிலைய சர்ச்சையில் அமைச்சர் வீரமணி

அதே நேரம் நாங்கள் வலுவாக உள்ள அரியலுார், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர் பதவியில் 175 இடங்களை எங்கள் அணி பெற்றிருக்கிறது. அதே போல் அரியலுார் மாவட்டத்தில் 57 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இதே போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஆளும் கட்சிக்கு அபார வெற்றி பெற்றுத்தந்துள்ளோம். எங்களை எங்கெல்லாம் அ.தி.மு.க நிர்வாகிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்களோ அங்கு அவர்கள் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். எங்களை பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்திய இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். திருவண்ணாமலையில் சில பகுதிகளில் எங்களை நம்பினார்கள், சில இடங்களில் எங்களை ஒதுக்கினார்கள். அதன்காரணமாகவே இழுபறியான நிலையை அந்த மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி பெற்றுள்ளது. இந்த உண்மையை இப்போது அ.தி.மு.க வினர் உணர்ந்திருப்பார்கள். அவர்கள் வெற்றி பெற்ற கொங்கு மண்டலத்திலும் நாங்கள் சில பகுதிகளில் வலுவாக இருக்கிறோம். அங்கு நாங்கள் அ.தி.மு.க விற்கு ஆத்மார்த்தமாக வேலை செய்தோம்” என்று பட்டியலிடுகிறார்கள்.

இந்த வருத்ததைத்தான் நேரடியாக வெளிப்படுத்தினார் அன்புமணி ராமதாஸ். அவர் பேசிய பிறகு அ.தி.மு.க வின் மூத்த அமைச்சர்கள் ராமதாஸிடம் உள்ளாட்சி தேர்தலில் நடந்த குளறுபடிகளுக்கு வருத்தம் கேட்டனர். அடுத்து நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் உரிய மரியாதை கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எங்கள் நிறுவனரின் நோக்கம். அ.தி.மு.க வின் இந்தக் கூட்டணி அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியினர் விருப்பம். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அ.தி.மு.க-தான். நாங்கள் குறைவான எண்ணிக்கையில் போட்டியிட்டு, ஐம்பது சதவிகிதத்தைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த விவரங்களை அ.தி.மு.க வினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!" என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
எம். விஜயகுமார்

அ.தி.மு.க தரப்பிலோ, “பா.ம.கவினரின் ஒத்துழைப்பை நாங்கள் மறுக்கவில்லை. குறிப்பாக வடமாவட்டங்களில் அவர்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது. ஆனால், இதை வைத்துக்கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டை கேட்பார்கள் என்கிற அச்சமும் எங்களுக்கு உள்ளது. சில மாவட்டங்களில் உட்கட்சி கோதாவில் பா.ம.க-வை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால், இனி அதுபோன்ற தவறுகள் செய்ய வேண்டாம் என்று தலைமையும் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது” என்கிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்க பிறகு பா.ம.க தனது வாக்கு வங்கியை வைத்து அரசியல் சதுரங்கத்தை ஆட ஆரம்பித்துள்ளது. இனி அ.தி.மு.க கூட்டணிக்குள் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு