Published:Updated:

`உள்ளாட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு!’- தூத்துக்குடி தி.மு.க வில் சலசலப்பு

உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் தெற்கு மாவட்ட தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலினுடன் அனிதா ராதாகிருஷ்ணன்
ஸ்டாலினுடன் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளைக் கைப்பற்றும் நோக்கில் அ.தி.மு.க-வும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் படுதீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க சார்பில் 9 பேரும், காங்கிரஸ், ம.தி.மு.க சார்பில் தலா 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா். அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரையில் 17 வார்டுகளிலும் அ.தி.மு.க வேட்பாளா்களே போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பதவிகளை குறிவைத்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் களமிறங்கியுள்ளனா். தி.மு.க மாநில மாணவரணி துணைச் செயலரான உமரிசங்கா், மாவட்ட ஊராட்சியின் 12-வது வார்டு தி.மு.க வேட்பாளராகவும், பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றும் வகையில், அவரின் மனைவி பிரம்மசக்தி 15-வது வார்டு தி.மு.க வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளனா்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர விசுவாசி. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியை கைப்பற்ற இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளருமான சண்முகையாவின் மனைவி சுகிர்தா 15வது வார்டிலும், சண்முகையாவின் சகோதரிகள் முத்துலெட்சுமி 14வது வார்டிலும், ஜெயலெட்சுமி 16வது வார்டிலும், சண்முகையாவின் சகோதரி முத்துலெட்சுமியின் மகன் ரமேஷ் 1வது வார்டிலும் தி.மு.க வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

அனிதா & சண்முகையா
அனிதா & சண்முகையா

`கணவன், மனைவி இரண்டு பேருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில்கூட சாதாரண தொண்டனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பணபலமே இதிலும் ஜெயித்துள்ளது' எனப் புலம்புகிறார்கள் தெற்கு மாவட்ட தி.மு.க-வினர்.

இதுகுறித்து தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், ``உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் வேட்பாளராக யாரை நிறுத்தினால் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சிலர் ஏற்கெனவே உள்ளாட்சிப் பதவியில் இருந்தவர்கள்.

ஸ்டாலினுடன் அனிதா
ஸ்டாலினுடன் அனிதா

அதனால் மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இதில் வேறெதுவும் இல்லை” என்றார். ஆனால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க-வில் குடும்ப ஆதிக்கம் தலைதூக்கி உள்ளதாக கழக உடன்பிறப்புகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.