Published:Updated:

முதியோர் உதவித்தொகைக்கு ரூ.3000 லஞ்சம்... இளைஞர்களின் கேள்வியால் அதிர்ந்த தென்பசியார் கிராமசபை!

கிராமசபை
கிராமசபை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கடைசி வரையில் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் என அழைக்கப்படும் கிராமசபைக் கூட்டம் வருடத்தின் நான்கு நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிமன்றத் தலைவரால் நடத்தப்படுகிறது. ஊராட்சிமன்றத் தலைவர் இல்லாமல் இருந்த கடந்த ஆண்டுகளில் ஊராட்சிமன்றச் செயலாளர் மூலம் இக்கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கூட்டத்தின் மூலம் ஊரக மேம்பாடு, ஊராட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, எதிர்கால வளர்ச்சி திட்டங்களைத் திட்டமிட்டு கிராம மக்களின் ஒப்புதலுடன் தீர்மானத்தையும் இக்கூட்டத்தில் நிறைவேற்ற முடியும்.

கிராமசபை
கிராமசபை

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், குடியரசு தினமான நேற்று (26.1.2020) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக 25ம் தேதி தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று காலை 11 மணி அளவில் கூட்டத்தை எதிர்பார்த்து மக்கள் கூடி இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் கூட்டம் நடைபெறும் இடத்தில் மக்கள் வெகுநேரமாகக் காத்திருந்தனர். கிராம வருவாய் அலுவலரின் உதவியாளர் மற்றும் கிராமச் செயலாளர் சிவசங்கரி தலைமையில் 12.45 மணியளவில் கூட்டம் தொடங்கியது. வழக்கம்போல முதியோர்களின் படையின்றி, இளைஞர்கள் பட்டாளம் திரண்டிருந்தது.

எதிர்காலத் திட்டமிடுதலை விவாதிப்பதற்கு முன் கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து ஊர் மக்களும், இளைஞர்களும் கேள்வி எழுப்பினர். கூட்டம் தொடங்கிய 30 நிமிடங்கள் கழித்தே, கிராமசபைக் கூட்டத்தின் மேற்பார்வையாளர் அருள் (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்) வருகை தந்தார். ஊராட்சி தரப்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள 2019-ம் ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் கால இடைவெளிக்கான ஊராட்சி செலவினங்களைப் பற்றிய விவரங்களை accountingonline.gov.in என்ற இந்திய அரசின் வலைதளத்தின் மூலம் அறிந்து வைத்திருந்த இளைஞர்களும், கிராம மக்களும் செலவினங்களுக்கான முறையான ஆவணங்களைப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். பணிகள் எதுவும் முறையாகச் செய்யப்படவில்லையே ஏன் எனக் கேள்வி எழுப்பினர். அதோடு, நிதி கையாடல் குறித்தும் தங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாதது குறித்த ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர். கிராமச் செயலாளரிடமிருந்து மழுப்பலான பதிலே வர, எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் 3 மணியளவில் முடிவுக்கு வந்தது கிராமசபைக் கூட்டம்.

கிராமசபை
கிராமசபை
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம்?! - ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகக் கொதிக்கும் இந்தியா #CAA #NowAtVikatan

ஊர் இளைஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"எங்கள் ஊராட்சி, தென்பசியார் மற்றும் அவனம்பட்டு கிராமங்களை உள்ளடக்கியது. தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள எங்கள் ஊராட்சியில் இதுவரை எந்த விதமான பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. ஆனால், அரசுக்கு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது போல் கணக்கு காட்டப்பட்டு பணத்தை மட்டும் லட்சக்கணக்கில் பெற்றுள்ளனர். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால இடைவெளியில் மட்டும் தெருவிளக்கு வாங்கியதற்கும் சரிசெய்ததற்கும் ரூ.77,490 செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒரு தெருவில் இரு விளக்குகள் கூட எரிவது இல்லை. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக ரூ.93,600 செலவு செய்யப்பட்டதாகப் பணம் வாங்கியிருக்கிறார்கள், அப்படி என்ன செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசுத் திட்டங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதற்கான அரசாணை வெளியிட்ட பின்னரும் அதைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள், தெரிவித்ததும் இல்லை. ஆனால் விளம்பரத்துக்கு ரூ.3000 செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர். தெருக்குழாயில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்ய மட்டும் ரூ.87,629 செலவு செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் நான்கு மினி டேங்குகள் உள்ளன. அதில் ஒன்று மட்டும்தான் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், மினி டேங்குகள் பராமரிப்புக்கு ரூ.77,590 செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், இருக்கும் அந்த ஒரு மினி டேங்கையும் சரியாகச் சுத்தம் செய்வதில்லை. பாசி கொடிகட்டித் தொங்குகின்றன. அதைச் சுத்தம் செய்யும் ஊழியருக்கு இரண்டு மாத்திற்கு ஊதியம் கொடுக்காததால், அவர் சுத்தம் செய்ய மாட்டேன் என்கிறார். எங்கே போனது இதற்காக செலவு செய்ததாகக் கணக்குக் காட்டிய பணம். மக்களுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? அதுமட்டுமன்றி ஒரேயொரு கை பம்பு மட்டுமே எங்கள் ஊரில் உள்ளது. அதற்கு ரூ.67,804 பராமரிப்புச் செலவு ஆனதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலைகளைச் செய்வதற்கு இவ்வளவு ரூபாய் செலவாகி இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தும் நிர்வாகத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்காக மேற்கூறியவற்றுக்கான ரசீது நகலையோ, எழுத்துபூர்வமான ஆதாரங்களையோ பார்ப்பதற்குக் கேட்டோம். எந்த விதமான ரசீது நகலும் காண்பிக்கப்படவில்லை. அனைத்தையும் அதிகாரிகளிடம் வாய்மொழியாகவே பேசிக் கொண்டதாகக் கூறுகின்றனர்.

கிராமசபை
கிராமசபை
கல்விக் கனவை நிறைவேற்றும் `தனியொருவன்' - `ஆரஞ்சு வியாபாரி டு பத்மஸ்ரீ' ஹஜப்பா

முக்கியமாக இதுநாள் வரை எங்கள் ஊரில் உள்ள பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்ததில்லை. பல ஆண்டுகளாகப் பூட்டியபடியே இருக்கிறது. தண்ணீர் வசதியும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சுண்ணாம்பு அடித்தனர். அதற்குப் பிறகாவது பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என்று இருந்தோம். ஆனால், இப்போதும் பூட்டியபடியே உள்ளது. அக்கழிப்பிடத்தைப் பராமரிப்பு செய்வதற்கு ரூ.2,25,000 செலவானதாகத் தெரிவித்துள்ளனர். பயன்பாட்டிற்கு வராத ஒன்றிற்குப் பராமரிப்புச் செலவு ரூ.2,25,000.

மாணவர்களின் அடிப்படைத் தேவை நூலகம். அது இருந்தும் தினமும் திறக்கப்படுவதே இல்லை. கிராமப்புறக் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக வந்த விளையாட்டுப் பொருள்களும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் ஒரு மூலையில் கிடக்கின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலை செய்யும் மக்களுக்கு அரசு நிர்ணயித்த ஒருநாள் கூலி ரூ.205. ஆனால், இங்கு ரூ.100 மட்டுமே தருகின்றனர். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன.

கிராமசபை
கிராமசபை

இது குறித்து, கிராமசபைக் கூட்டத்தில் கிராமச் செயலாளரிடம் கேட்டதற்கு, மேல் உள்ள கணக்கு விவரங்களில் `பணிக்கான பெயர் மாற்றி தவறாக அச்சிடப்பட்டுள்ளது’ என்று கூறுகிறார். அரசின் கணக்கு வளைதளத்தில் பதியப்படுவது தவறாக இருக்க முடியுமா? குடிமராத்துத் திட்டம், விளையாட்டு மைதானம் டெண்டர்கள் பற்றிக் கேட்டால்… கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். செலவுகளுக்கான ரசீதும் இல்லை என்கிறார். ஏதேதோ புகைப்படங்களைக் காட்டுகிறார். இதில் வீடுவீடாக வரிப் பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஆனால், அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து தருவதில்லை. அரசிடம், பணிகளைச் செய்து முடித்ததாக மேலுள்ள படி கூறி பணம் மட்டும் பெற்றுள்ளனர். யாரை ஏமாற்றும் செயல்கள் இவை? ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் `சாவியை உங்களிடமே தந்து விடுகின்றேன். நீங்கள் யாராவது பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

பொதுமக்கள் பார்த்துக்கொள்வதற்கு எதற்கு பஞ்சாயத்து அமைப்பு? செயல்படாத நூலகத்தில் நூலகருக்கு மாதமாதம் சம்பளம் மட்டும் செல்கிறது. ஆதிதிராவிடச் சமூகத்தைச் சேர்ந்த வயதான ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை பெறுவது குறித்து கிராம நிர்வாக அலுவலகம் சென்று கேட்டுள்ளார். வி.ஏ.ஓ உதவியாளர் ரூ.3000 லஞ்சம் கேட்டுள்ளார். அம்மூதாட்டியால் எப்படி ரூ.3000 தர முடியும்? எங்களிடம் அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது!” என்றனர் ஆதங்கத்துடன்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க, அ.ம.மு.க, நாம் தமிழருக்கு எந்த இடம் - ஓர் அலசல்!

கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபை. மேலும், கிராம சபைக்கு மாநிலச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது. இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும் ஒரு சில தவறான அதிகாரிகளால் அது முறையான செயல்பாட்டுக்கு வராமல் போகிறது. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படத்தானே தவிர, தங்களின் சொந்த நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள அல்ல என்பதை இந்த அதிகாரிகள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ!

அடுத்த கட்டுரைக்கு