Published:Updated:

`விலைக்கு வாங்க வாய்ப்புக் கிடைத்தால் விடக்கூடாது!' - அ.தி.மு.க-வால் கலங்கும் மதுரை தி.மு.க

`மற்ற மாவட்டங்கள் போலவே, தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களை விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்தால் விடக் கூடாது' என்று அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தி.மு.க மா.செ. மூர்த்தி
தி.மு.க மா.செ. மூர்த்தி

`மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாட்டால், வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் அ.தி.மு.க-வுக்கு இடம்மாறத் திட்டமிட்டுள்ளார்கள். இதை அ.தி.மு.க பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. கிடைத்த வெற்றியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது'' என்று மதுரை உடன்பிறப்புகள் கவலையடைந்திருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

என்ன நடந்தது என்று விசாரித்தோம். ``அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த மதுரை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திருப்பரங்குன்றம் இடைதேர்தலிலும் அந்தக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை தி.மு.க பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட கவுன்சிலில் பார்வர்டு பிளாக்கைச் சேர்ந்த ஒருவருடன் சேர்த்து 14 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளியது.

இரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டத்தில், அதிகாரமிக்க மாவட்ட கவுன்சிலுக்கு தலைமைதாங்கும் வாய்ப்பு தி.மு.க-வுக்கு கிடைத்துள்ளது. ஒன்றிய கவுன்சில்களிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். `மற்ற மாவட்டங்கள் போலவே, தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களை விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்தால் விடக் கூடாது' என்று அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

அப்படி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று கவுன்சிலர்களை பாதுகாப்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் சிலரின் செயல்பாட்டால் மனம் நொந்துபோயிருக்கிறார்கள். `அ.தி.மு.க பக்கம் போய்விடலாமா?' என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் ஆளும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

என்ன காரணம் என்றால், தேர்தலுக்கு முன் திருமங்கலம் பகுதியில் போட்டியிட்ட ஒருவரைத்தான் மாவட்ட கவுன்சில் தலைவராக்குவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது வேறு ஒருவரை தலைவராக்க உள்ளதாலும் கவுன்சிலர்களை மரியாதை இல்லாமல் பேசுவதாலும் அணுகுமுறை பிடிக்காமல் சில கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

தி.மு.க மா.செ. மூர்த்தி
தி.மு.க மா.செ. மூர்த்தி

அதற்கு, `அ.தி.மு.க-வில் ஆதாயத்தைப் பெற்று அமைதியாகக் காலத்தை ஓட்டிவிடலாம்' என்று சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். மாவட்ட கவுன்சிலர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயை தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி அட்வான்ஸாகக் கொடுத்திருந்தாலும், அ.தி.மு.க தரப்பில் கோடி என்ற கணக்கில் பேரம் பேசி வருகிறார்கள். கூட்டணியைச் சேர்ந்த பார்வர்ட் பிளாக் வேட்பாளரையாவது முதலில் இழுத்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பில் முயன்று வருகிறார்கள்'' என்றனர் தி.மு.க-வினர்.

இதுபற்றி அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், ``4 கவுன்சிலர்கள் தேவை என்பதால் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தோம். இப்போது அவர்களே வருவதாக இருந்தால், நல்ல மரியாதையுடன் வரவேற்போம்'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.

`எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு; திடீரென உருவான ஜெயலலிதா சிலை!' -கொதிக்கும் மதுரை தி.மு.க

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தியிடம் பேசினோம். ``இப்படி பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். 14 மாவட்ட கவுன்சிலர்களும் எங்களுடன் பத்திரமாக இருக்கிறார்கள். தி.மு.க கவுன்சிலர்களை யாரும் விலை பேச முடியாது. மதுரை மாவட்ட கவுன்சில் சேர்மன் பொறுப்பில் தி.மு.க அமரும். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.