Published:Updated:

`தனி மெஜாரிட்டி; ஆளுக்கொரு கவுன்சிலர் தேவை!' -அனிதா, கீதா ஜீவன் மோதலால் திணறும் ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடியில் தி.மு.க-வுக்குத் தனி மெஜாரிட்டி இருந்தும் கோஷ்டிப் பூசலால், ஓட்டப்பிடாரம் சேர்மன் பதவியைக் கைப்பற்றுவதில் இரண்டு மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 12 வார்டுகளிலும் அ.தி.மு.க 5 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 வார்டுகளிலும் காங்கிரஸ் 1 வார்டிலும் சுயேச்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த யூனியனில் தி.மு.க-வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.

ஆதரவு கவுன்சிலர்களுடன் ரமேஷ்
ஆதரவு கவுன்சிலர்களுடன் ரமேஷ்

இருப்பினும், தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேயான நீயா, நானா போட்டியில் சேர்மன் பதவியைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டப் போட்டி நிலவி வருகிறது.

இதன் எதிரொலியாக, 1-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் 5 தி.மு.க கவுன்சிலர்கள், 2 சி.பி.எம் கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 11 பேரும், இதேபோல, ஓட்டப்பிடாரம் தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளரும், 10-வது வார்டு கவுன்சிலருமான காசி விஸ்வநாதன் தலைமையில் 5 தி.மு.க கவுன்சிலர்கள், 5 அ.தி.மு.க கவுன்சிலர்கள் என மொத்தம் 11 பேரும் தனித்தனியாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆதரவு கவுன்சிலர்களுடன் காசி விஸ்வநாதன்
ஆதரவு கவுன்சிலர்களுடன் காசி விஸ்வநாதன்

இதில், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவில் ரமேஷும், கீதாஜீவனின் ஆதரவில் காசி விஸ்வநாதனும் சேர்மன் பதவியைக் கைப்பற்ற கடுமையாகக் காய்நகர்த்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ சண்முகையா, கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகிய இருவரும் சீட்டுக்காக முட்டி மோதினர். ஆனால், சண்முகையாவுக்கே சீட் கொடுக்கப்பட்டு, அவர் எம்.எல்.ஏ-வும் ஆனார்.

கீதாஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன்
கீதாஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன்

எம்.எல்.ஏ சீட் கிடைக்காத தனக்கு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் பதவியாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் காசிவிஸ்வநாதன். எதிர்பார்த்தது போலவே 22 வார்டுகளில் 12 வார்டுகளில் தி.மு.க தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்றுள்ளது. காசிவிஸ்வநாதன் கீதாஜீவனின் ஆதரவாளர் என்பதால்தான் அவருக்குப் பதவி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

காசிவிஸ்வநாதனை தேர்வு செய்யாவிட்டாலும் தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 12 பேரில் ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்யலாம். இல்லாவிட்டால், தலைவர் பதவி அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளருக்கும், துணைத் தலைவர் பதவியை காசிவிஸ்வநாதனுக்கும் கொடுக்கலாம். ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரின் பனிப்போரால் தற்போது ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் உடைந்து நிற்கிறார்கள்.

ஆலோசனையில் காசிவிஸ்வநாதன் அணியினர்
ஆலோசனையில் காசிவிஸ்வநாதன் அணியினர்

இதில், இரண்டு தரப்புக்குமே ஒரு கவுன்சிலர் தேவை. தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென இருவரும் துடிக்கிறார்கள். ஒரே கட்சியில் தனி மெஜாரிட்டையை வச்சுக்கிட்டு இன்னொரு கவுன்சிலரின் ஆதரவை எதிர்பார்த்து நிற்பது, கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா இருக்கு” என்கின்றனர் ஆதங்கத்துடன்.