Published:Updated:

`வாழவிடமாட்டார்களோ என்ற ஆதங்கம்தான்'- வாக்குக்குக் கொடுத்த பரிசுகளைக் கோயிலில் கொடுத்த டெய்லர்!

இந்தப் பரிசுப் பொருள்கள் வீட்டில் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருவேளை சாப்பாடு கூட நிம்மதியாக என்னால் சாப்பிட முடியவில்லை.

பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்த பச்சமுத்து
பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்த பச்சமுத்து

ஓட்டுப் போடச்சொல்லி விளக்கு, தட்டு, குத்துவிளக்கு எனப் பல பொருள்களைக் கொடுத்திருக்கிறார்கள். இது வீட்டில் இருப்பதைப் பார்க்கும் போது ஒருவேளைச் சாப்பாடு கூட என்னால் நிம்மதியாகச் சாப்பிடமுடியவில்லை என்று வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்து வந்திருக்கிறார் ஒரு டெய்லர்.

பரிசுப் பொருள்கள்
பரிசுப் பொருள்கள்

அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டாங்குறிச்சி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவருக்கு எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தலைவர் பதவிக்கு நின்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விளக்கு, தட்டு, டம்ளர் போன்ற பரிசுப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்களால் இருந்திருக்கிறது. தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க முடியாமல் இருப்பதாகவும் இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறி வேட்பாளர்கள் கொடுத்த பரிசுகளைக் கோயிலில் ஒப்படைத்தார்.

பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்த பச்சமுத்து
பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்த பச்சமுத்து

இதுகுறித்து டெய்லர் பச்சமுத்துவிடம் பேசினோம். ``ஒரு வேட்பாளரிடம் பரிசுப் பொருள்களைப் பெற்றால் எனது குடும்பத்தை அவனிடம் அடகு வைக்கிறேன் என்று அர்த்தம். நான் தினக்கூலி. தினமும் கடைக்கு வந்தால்தான் என் வீட்டில் ஒரு வேளை சோறு பொங்கும். என்னதான் நான் கஷ்டப்பட்டாலும் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில் நான் வீட்டில் இல்லாத போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று மாறிமாறி குத்துவிளக்கு, தட்டு, டம்ளர், சீப்னு பல பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

என் மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டு கடைக்கு வந்தேன். பணமோ, பொருள்களோ யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாதென்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்படியிருந்தும் அவர்கள் இதைப் பார்த்தால் கண்டிப்பாக ஓட்டுப்போடுவீர்கள் என்று பொருள்களை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்
வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்

இந்தப் பொருள்கள் வீட்டில் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருவேளை சாப்பாடு கூட நிம்மதியாக என்னால் சாப்பிட முடியவில்லை. இந்தச் சமுதாயத்தில் நான் சரியான மனிதனாக வாழ நினைக்கிறேன். ஆனால், என்னை வாழவிடமாட்டார்களோ என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பரிசுப் பொருள்களைக் கோயிலில் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டேன். இதற்கு மேல் என்னை ஒண்ணும் கேட்காதீர்கள்" என்று ஆதங்கத்தோடு முடித்தார். பச்சமுத்துவின் நேர்மையைக் கண்டு பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.