Published:Updated:

`போட்டிக்கு வந்த சொந்தக் கட்சிக்காரர்; கைகொடுத்த அ.தி.மு.க!'- மயிலாடுதுறையில் தி.மு.க த்ரில் வெற்றி

மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வினரிடையே நடைபெற்ற மோதலில் தி.மு.க த்ரில் வெற்றி.

சேர்மன் தேர்தலில்
சேர்மன் தேர்தலில்

மயிலாடுதுறை ஒன்றியக்குழுவிற்கான தேர்தலில் மொத்தமுள்ள 27 இடங்களில் 17 தி.மு.க .கைப்பற்றி பெரும்பான்மையாக இருந்தது, அ.தி.மு.க. 5 சுயேட்சைகள் 3, பா.ம.க. 1, காங்கிரஸ் 1 என வெற்றி பெற்றிருந்தனர். மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் தொகுதி பொதுவானதாக இருந்ததால் தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி மனைவி காமாட்சி மூர்த்தி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்தது. இதற்கிடையே தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மனைவி ஸ்ரீமதியை நிறுத்த ஒரு குழுவினர் வேலை செய்தனர். அதற்காக ஆள்தூக்கும் படலம் நடைபெற்றது.

சேர்மன் தேர்தலில்
சேர்மன் தேர்தலில்

பொது தொகுதியில் ஆதிதிராவிடர் அல்லாதவரை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நேரத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஸ்ரீமதி இளையபெருமாளை தி.மு.க.உறுப்பினர்கள் ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் தி.மு.க-விற்குள்ளேயே இரண்டு பிரிவாகி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த காமாட்சி மூர்த்தியும் ஸ்ரீமதி இளையபெருமாளும் வேட்பாளராகப் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த மகேஸ்வரி முருகவேல் என்பவரும் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தலா 12 வாக்குகளைப் பெற்று சம நிலையில் இருந்தனர். அ.தி.மு.க.விற்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மறு வாக்குப் பதிவின்போது அ.தி.மு.க தேர்தலில் நிற்கமுடியாது என்பதால் அ.தி.மு.க ஒன்றியகழக செயலாளரும் ஒன்றியகுழு உறுப்பினருமான சந்தோஷ்குமார் வாக்குப் பதிவில் கலந்துகொள்ளவில்லை. மீண்டும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் காமாட்சி மூர்த்திக்கு வாக்களித்ததால் 14 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். ஸ்ரீமதி இளையபெருமாள் அதே 12 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.

சேர்மன் தேர்தலில்
சேர்மன் தேர்தலில்

அதன்பிறகு நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில் காமாட்சி மூர்த்தி வெற்றிபெறுவதற்கு வாக்களித்த மகேஸ்வரி முருகவேல் (அதிமுக) வெற்றிபெற்றார். தலைவர் பதவியை தி.மு.கவும் துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க-வும் பெற்றுள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தி.மு.க. தலைவர் தளபதி வழிகாட்டுதல்படி நான் செயலாற்றுவேன். மயிலாதுறை ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் வேளையில் ஒன்றியக்குழு தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர் என்று கம்பீரமாக சொல்ல முடியாமல் நின்று பெற்ற வெற்றி இது" என்றார்.