Published:Updated:

`வன்முறை இருமுனை கத்தி... அது நம்மையே தாக்கும்!' - பிரசாரக் கூட்டத்தில் கொதித்த கடம்பூர் ராஜு

"உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. மக்களை சந்திக்க தி.மு.க-வுக்கு மட்டுமல்ல அவர்களுடைய சின்னத்துக்கும் பயம்" என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, தூத்துக்குடி தெற்குமாவட்ட அ.தி.மு.க செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மக்களிடம் விளக்கம் கேட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டம் இயற்றப்பட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் விவாதிக்கலாம்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

வெளிநடப்பு செய்யலாம், முற்றுகைப் போராட்டம் நடத்தலாம், தர்ணா செய்யலாம். ஆனால், மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது நல்ல தீர்வாக இருக்காது. வன்முறை என்பது இருமுனை கத்தி போன்றது. அது திருப்பி நம்மையே தாக்கும் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்துள்ளார். இதை அண்ணாவின் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்தும் தி.மு.க கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. மக்களைச் சந்திக்க தி.மு.க தயாராக இல்லை. உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலை அறிவிக்க சொல்வதும், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வது தி.மு.கதான்.

தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு இருப்பதாக ஒரு பொய்யான பிரசாரத்தின் மூலம் தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. அது உண்மை இல்லை என்று தெரிந்துகொண்டு, இரண்டு இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க-வுக்கு வெற்றியைத் தந்தனர்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என்ற ஒரு மாயையை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளது தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதியை தி.மு.க கொடுத்தது மக்களுக்கு தெரிந்துவிட்டது. மக்களைச் சந்திக்க தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சின்னத்துக்கும் பயம் ஆகையால் சின்னமும் மறைந்துகொண்டே இருக்கிறது" என்றார்.