Published:Updated:

`ஸ்மார்ட் சிட்டி ஆய்வுப் பணி சர்ச்சை!?' - கோவை மாநகராட்சி விளக்கம்!

கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை, அதிகாரிகளின் முன்னிலையில் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் ஆய்வு செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அன்பரசன் ஆய்வு
அன்பரசன் ஆய்வு

நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரை ரூ.1,100 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி

திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா கோவை ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பவே, சுகன்யா அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, உக்கடம் வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் ஆய்வு செய்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அன்பரசன் ஆய்வு செய்தது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகமே செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி செய்திக் குறிப்பு
மாநகராட்சி செய்திக் குறிப்பு

அதில், 'ஸ்மார்ட் சிட்டி பணிகளை, கமிஷனர் ஷ்ரவன் குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டார்' என்று கூறப்பட்டுள்ளது.

``அன்பரசன் மாநகராட்சி நிர்வாகியும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி நிர்வாகியும் இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்? ஆய்வு செய்ய, சமூக ஆர்வலர் என்ற ஒற்றைத் தகுதி போதுமென்றால், கோவை முழுவதும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஏன் அழைக்கவில்லை?

ஸ்மார்ட் சிட்டி பணி
ஸ்மார்ட் சிட்டி பணி

ஏற்கெனவே, அரசு நிர்வாகத்தில் அன்பரசனின் தலையீடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்திக் குறிப்பு அமைந்திருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத், ``மாநகராட்சி அதிகாரிகள் மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டி பணிக்காகச் சென்றிருந்தோம். அன்பரசன், அருகில் இருந்த சிறுதுளி தன்னார்வ அமைப்பின் அலுவலகத்துக்கு வந்திருந்தார். வரும் வழியில் எதேச்சையாக சந்தித்தோம். `நல்லா இருக்கீங்களா’ என்று என்னிடம் கேட்டார்.

ஷ்ரவன் குமார் ஜடாவத்
ஷ்ரவன் குமார் ஜடாவத்

வேறு எதுவும் அவர் பேசவில்லை. அவருக்கும் இந்த ஆய்வுக்கும் சம்பந்தமே இல்லை. இதை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் போட்டோ எடுத்ததுடன், அதை ஊடகங்களுக்குச் செய்திக் குறிப்பாகவும் வெளியிட்டுள்ளனர். இது பி.ஆர்.ஓ செய்த தவறு. அவரை நான் கண்டித்துள்ளேன்” என்றார்.

இதுகுறித்து எஸ்.பி.அன்பரசனிடம் பேசியபோது, ``சாலை பிரச்னை சம்பந்தமாக சிறுதுளி அமைப்பினர் என்னிடம் சொல்லியிருந்தனர். அதற்காக, சிறுதுளி அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். மாநகராட்சி அதிகாரிகள் அருகில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் செல்லும்போது அவர்களைச் சந்தித்தேன்.

எஸ்.பி.அன்பரசன்
எஸ்.பி.அன்பரசன்

அவ்வளவுதான். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தவறாக செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். நான் இதற்கு முன்பும் அரசுப் பணிகளை ஆய்வு செய்தது இல்லை. அரசுப் பணிகளில் தலையிடுவதுமில்லை” என்றார்.