Published:Updated:

கரன்ட் இல்லை… பெயர் இல்லை… தேர்தலில் புலம்பிய தேனி மக்கள்!

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

தேனியில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சிறு சிறு பிரச்னைகள் இருந்தன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில், வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சிறு சிறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன.

தங்க.தமிழ்ச்செல்வன்
தங்க.தமிழ்ச்செல்வன்

அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க சென்று தற்போது தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், தனது சொந்த ஊரான கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.

வாக்குச்சாவடியில் கரன்ட் இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துடன் சின்னங்களைக் கண்டுபிடித்து முத்திரை இட வேண்டிய சூழல் நிலவியது. அதைக் கண்ட தங்க.தமிழ்ச்செல்வன், ``உடனே மின்சாரம் வழங்குங்கள்… இல்லையென்றால் வாக்குப்பதிவை நிறுத்துங்கள்…’’ என்றார்.

தங்க.தமிழ்ச்செல்வன்
தங்க.தமிழ்ச்செல்வன்

அதிகாரிகளுடனான சமரசத்தினை அடுத்து, அமைதியான தங்க.தமிழ்ச்செல்வன், தனது ஆதரவாளர் ஒருவர் கொண்டுவந்திருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்களித்தார். பின்னர், மின்தடை சரிசெய்யப்பட்டது. இதே போல, எண்டப்புலி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலும் மின்தடை இருந்ததால், மக்கள் வாக்களிக்க மிகவும் சிரமப்பட்டுப் புலம்பிக்கொண்டே வாக்களித்தனர்

மாவட்டத்தின் ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினைப் பார்வையிட, வாக்குச்சாவடிகளுக்கு திடீர் விசிட் அடித்தார் மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ்.

கலெக்டரிடம் முறையிடும் உதயகுமார்.
கலெக்டரிடம் முறையிடும் உதயகுமார்.

அரண்மனைப்புதூர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியினைப் பார்வையிட்ட அவரிடம், ``தனக்கு வாக்கு இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், வாக்குச்சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.!” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் உதயகுமார் என்பவர். உடனே, அதிகாரிகளை அழைத்து, ``பிரச்னையைச் சரி செய்யுங்கள்.!” என்றார் கலெக்டர்.

`ஊரைக் காணவில்லை', `தி.மு.க பிரமுகரின் மண்டை உடைப்பு!' -திகைக்கவைத்த தேனி வாக்குச்சாவடிகள்

நம்மிடம் பேசிய உதயகுமார், ``அரண்மனைப்புதூர் 7வது வார்டில் வசிக்கிறேன். எனது மனைவி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் எனக்கு என்னுடைய பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது வாக்களிக்க வந்தால், உங்கள் பெயர் இல்லை எனக் கூறுகிறார்கள்.

அதனால்தான் கலெக்டரிடம் கேட்டேன். ஓட்டுப்போட வழிவகை செய்வதாகக் கூறியுள்ளார். ஒரே முகவரியில், ஒரே வீட்டில் இருக்கும் என் மனைவி வாக்களித்துவிட்டார். என்னால் வாக்களிக்க முடியவில்லை எனக் கூறுவது முறையாக இல்லை.!” என்று கொதித்தார்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்
`அது ஸ்டாலினுக்கே தெரியாது!'- தேனி பிரச்சாரத்தில் ஆவேசமான ரவீந்திரநாத் குமார்

தேர்தலுக்கு முன்பாக குலுக்குச் சீட்டு முறையில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்காபுரம் கிராமத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துகொடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, வாக்களிக்க மறுத்து, தேர்தலைப் புறக்கணித்த முதுவாகுடி மலைகிராம மக்கள், இந்தமுறை, குரங்கணியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு