Published:Updated:

`திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த வேட்பாளர்'- சோகத்தில் மூழ்கிய நெடுவாசல் கிராமம்!

புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் மல்லிகா
வேட்பாளர் மல்லிகா

புதுக்கோட்டை அருகே நெடுவாசல் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி மல்லிகா(42). இவர் நெடுவாசல் மேற்கு ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். தனக்கு ஆதரவாக, தினமும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்கு சேகரித்து வந்தார். இந்த நிலையில்தான் நேற்று திடீரென மல்லிகாவுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

`திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த வேட்பாளர்'- சோகத்தில் மூழ்கிய நெடுவாசல் கிராமம்!

இதையடுத்து, அவரை பேராவூரணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்தார். மல்லிகாவின் திடீர் மரணம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மல்லிகாவின் உறவினர்கள் கூறும்போது, ``முதல் முறையாக இந்தத் தேர்தலில்தான் போட்டியிட்டாங்க. 5வது வார்டுக்கு மல்லிகாவுடன் சேர்த்து மொத்தம் 7 பேர் போட்டி போட்டுருக்காங்க. தான் வெற்றிபெற்று மக்களுக்கு நல்லது பண்ணணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதே மாதிரி, மல்லிகா வெற்றி பெறுதற்கான வாய்ப்புகள்தான் நிறையவே இருந்துச்சு.

வேட்பாளர் மல்லிகா
வேட்பாளர் மல்லிகா

ஆனா, இப்படி திடீர்னு இறந்து போயிருவாங்கன்னு யாருமே எதிர்பார்க்கலை. அவங்க ஆசையை நிறைவேறணும். ஆனால், எதிர்த்து போட்டியிடுறவங்க, மல்லிகாவுக்கு ஆதரவாக வாக்களிக்கிறவங்ககிட்ட அந்த வாக்கு பயனில்லைன்னு சொல்லிக் குழப்பி விடுறாங்க. ஆனாலும், மல்லிகாதான் ஜெயிப்பாங்க" என்கின்றனர்.