Published:Updated:

ஊராட்சித் தலைவர் பதவி... ரூ.1,500 பட்ஜெட்... அலகுமலையைக் கலக்கும் `தூயமணி'!

தூயமணி
தூயமணி

நடந்து போய் நோட்டீஸ் கொடுக்க ரெண்டு கால் இருக்கு. நல்லது செய்யணுங்கற எண்ணம் இருக்கு. வேற என்ன வேணும் என்கிறார் தூயமணி

பதவிகளை ஏலம் எடுப்பது, பல லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பது என உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானமாக மாறிவருகிறது. ஜனநாயகம் பணநாயகமாகி, உள்ளாட்சி ஊழலாட்சியாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமம் கோவில்பாளையத்தைச் சேர்ந்த தூயமணி என்பவ, பண செல்வாக்கு இல்லாமல் பட்ஜெட் வேட்பாளராகக் களம் காண்கிறார்.

தூயமணி
தூயமணி

இந்தத் தேர்தலுக்கு இவர் செய்த செலவு ரூ.1,500 தான். ``பணம் இன்னிக்கு இருக்கும் நாளைக்கு இருக்காது. நடந்து போய் நோட்டீஸ் கொடுக்க ரெண்டு கால் இருக்கு. நல்லது செய்யணுங்கற எண்ணம் இருக்கு. வேற என்ன வேணும்" என்கிறார் தூயமணி. அலகுமலை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவரிடம் மேலும் பேசியபோது, ``மக்களுக்கு நல்லது செய்யணுங்கிற எண்ணம் சின்ன வயசுல இருந்தே இருக்கு. அதுதான் என்னை அரசியலில் ஈடுபடவைத்தது. பள்ளிப் படிப்புக்கு அப்புறம் விவசாயத்துல இறங்கினேன். இப்போ அரசியல்ல இறங்கிட்டேன். மேடைப் பிரசாரம், வாகனப் பிரசாரம் போன்ற எதையும் செய்வதில்லை.

தூயமணி
தூயமணி

நடந்துசென்று நோட்டீஸ் கொடுத்துதான் பிரசாரம் செய்யறேன். குறுகிய கால பிரச்சாரம் யாரையும் ஜெயிக்க வைக்காது. இங்க இருக்கற மக்களுக்கு என்னை ரொம்ப வருஷமா தெரியும். நோட்டீஸ் அடிக்கறதுக்கு மட்டும்தான் செலவு. வேற எந்தச் செலவும் இல்லை.

மக்களின் கோரிக்கைகளுக்காக, ஏராளமான மனுக்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நின்றவன் நான். போன இரண்டு முறையும் இது பெண்கள் ஒதுக்கீடாக இருந்துச்சு. அப்போ என் அம்மா, சகோதரியும் நின்று வெற்றிபெற்றனர். அப்பவும் செலவு பண்ணல. எனக்குத் திருமண வாழ்க்கை அமையல. அதனால் குடும்பச் செலவு அதிகம் இல்ல. பணம் மட்டுமே எல்லாத்தையும் நிரூபிக்காது.

தூயமணி
தூயமணி

அதுவும் கோவில்பாளையம் மக்கள், மனுசங்களை நம்பறவங்க. யாருக்காகவும் எதுக்காகவும் நான் அடிமையாக மாட்டேன். அதனால, எந்தக் கட்சியிலும் இணையல. நேர்மையா இருந்து என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யணும். அவ்வளவுதான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு