Published:Updated:

`உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓடந்துறை சண்முகம்!' - மக்கள் கொடுத்த உள்ளாட்சி அதிர்ச்சி

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

நான்குமுனைப் போட்டி நிலவினாலும் ஓடந்துறை சண்முகம் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே கருதப்பட்டது. ஆனால்..?

`உலகமே வியந்து பார்த்த ஓர் கிராமம் ஓடந்துறை பஞ்சாயத்து' என்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்கள் இப்போதும் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஓர் பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், உலக நாடுகளையும் தங்களது கிராமத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு ஓடந்துறை சண்முகம் சிறந்த உதாரணம்.

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகம் மற்றும் அவரின் மனைவி லிங்கம்மாள் ஆகியோர் ஓடந்துறை ஊராட்சித் தலைவர்களாக இருந்து வந்தனர்.

அவர்களது பதவிக் காலத்தில், காற்றாலை அமைத்து, அதன் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஊர் மக்களின் தேவைக்குப் போக மீதம் உள்ள மின்சாரத்தை, தமிழக அரசின் மின் வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 850 பசுமை வீடுகளைக் கட்டித்தந்து, ஓடந்துறையை குடிசைகள் இல்லாத கிராமமாக மாற்றினார், சண்முகம்.

ஓடந்துறை
ஓடந்துறை

நாட்டிலேயே முதன்முறையாக, ராஜீவ் தேசிய குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஊராட்சியில்தான். இப்படி ஓடந்துறையை, மோஸ்ட் வான்டட் கிராமமாகத் திரும்பிப் பார்க்க வைத்த சண்முகத்துக்குப் பல்வேறு விருதுகள் கிடைத்தன.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓடந்துறை ஊராட்சித் தலைவர் பதவிக்கு சண்முகம் (அ.தி.மு.க) போட்டியிட்டார். அவருக்கு எதிராக அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் தங்கவேல் (தி.மு.க) போட்டியிட்டார். இவர்களைத் தவிர, சிறிஸ் கந்தராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் போட்டியிட்டனர்.

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

நான்குமுனைப் போட்டி நிலவினாலும் சண்முகம் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே கருதப்பட்டது. ஆனால், 57 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலிடம் சண்முகம் தோல்வியடைந்தார்.

ஓடந்துறையை நாட்டின் முன்மாதிரி கிராமமாக மாற்றிய சண்முகம் தோல்வியடைந்திருப்பது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகத்திடம் பேசினோம். ``ம்... என்ன சொல்றதுங்க.. மக்கள்கிட்ட விசுவாசம் இல்லன்னுதான் சொல்லணும். எங்க அப்பா காலத்துல இருந்து ஓடந்துறை பஞ்சாயத்துக்காக நாங்க உழைச்சுகிட்டு இருக்கோம்.

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

அரசுகிட்ட இருந்து கிடைக்கிற நிதிகள 100 சதவிகிதம் முழுமையா பயன்படுத்தியிருக்கோம். அதனாலதான் ஓடந்துறை இன்னிக்கு இப்படி வளர்ந்துருக்கு.

தேர்தல் பிரசாரத்துல எனக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. போன இடத்துல எல்லாம் நல்ல கூட்டம். நேருக்கு நேர் என்ன எதிர்த்து ஜெயிக்க முடியாதுனு நினைச்சவங்க, மக்களுக்கு காசு கொடுத்து திசை திருப்பிட்டாங்க. மக்களும் கடந்த காலத்த பத்தியெல்லாம் நினைச்சுப் பார்க்காம, அவங்க கொடுத்த 1,000 ரூபா தான் பெருசுனு அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

மக்களுக்கு இவ்வளவு பண்ணியும் 1,000 ரூபாதான் வெற்றிய தீர்மானிக்குதுன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கு.

ஒவ்வொரு வீட்லயுமே சொந்தமா மின்சாரம் தயாரிக்கிற மாதிரி ஒரு திட்டம் கொண்டு வரலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.
ஓடந்துறை சண்முகம்

ஓடந்துறைல பட்டியலின மக்கள் சிலருக்கு வீடு இல்லாம இருக்கு. இந்த முறை ஜெயிச்சிருந்தா அந்த மக்களுக்கு வீடு கட்டித் தரலாம்னு நினைச்சிருந்தேன். முக்கியமா சொல்லணும்னா, ஒவ்வொரு வீட்லயுமே சொந்தமா மின்சாரம் தயாரிக்கிற மாதிரி ஒரு திட்டம் கொண்டு வரலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.

ஓடந்துறை சண்முகம்
ஓடந்துறை சண்முகம்

அதாவது, மின்வாரியத்துக்கிட்ட போகாம, அந்தந்த வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அவங்களே தயாரிச்சுக்கிறதுதான் அந்தத் திட்டம். என்ன பண்றது மக்களுக்கு வெயில்ல நிக்கிறப்பத்தான் நிழலோட அருமை தெரியும்'' என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு