Published:Updated:

`இதுவரையிலும் கேள்விப்படாத புது தில்லுமுல்லு இது..!' -பெண் வேட்பாளரைப் பதறவைத்த தேர்தல் அதிகாரி

``மொத்தம் பதிவான வாக்குகளில் ஒரு வாக்கு குறையுதேனு கேட்டதுக்கு, அது எங்கேயோ காணாமல் போயிடுச்சினு அதிகாரிகள் சொல்றாங்க. இதை நாங்க சும்மா விடமாட்டோம்” எனக் கொந்தளிக்கின்றனர் பெண் வேட்பாளர் தரப்பினர்.

எண்கண் ஊராட்சி
எண்கண் ஊராட்சி

வாக்குப்பதிவின் போது மட்டுமல்ல... வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பிலும்கூட, விதவிதமான வில்லங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட எண்கண் ஊராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவின்போது அதிகாரிகள் சொன்ன ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `இதுவரையிலும் கேள்விப்படாத புதுமையான தில்லுமுல்லு இது' எனத் தோல்வியடைந்தவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

எண்கண் ஊராட்சி
எண்கண் ஊராட்சி

எண்கண் ஊராட்சியின் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, முத்துலட்சுமி, லலிதா, காந்தா ஆகிய மூவர் போட்டியிட்டனர். மொத்தம் 187 வாக்குகள் பதிவாகியிருப்பதாக, அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் எண்ணிக்கை முடிவின்போது, லலிதா 85 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகவும் இவருக்கு அடுத்த நிலையில் முத்துலட்சுமி 84 வாக்குகளையும் காந்தா 7 வாக்குகளையும் செல்லாதவை 10 வாக்குகள் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பின்படி பார்த்தால், மொத்தம் 186 வாக்குகள்தான் கணக்கில் வருகின்றன. ஆனால் பதிவானதோ 187 வாக்குகள். அப்படியென்றால் அந்த ஒரு ஓட்டு எங்கே என முத்துலட்சுமி தரப்பினர் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் கொடுத்த அதிகாரிகள், ’அந்த ஒரு ஓட்டு எங்கேயோ காணாமல் போயிடுச்சி. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?” எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முத்துலட்சுமி தரப்பினர் ‘’ நாங்க 85 ஓட்டுகளை வாங்கியிருந்தோம். லலிதாவும் 85 ஓட்டுகளை வாங்கியிருந்தாங்க. காந்தா 7 ஓட்டுகள், செல்லாத ஓட்டுகள் 10 என மொத்தம் 187 ஓட்டுகள் கணக்கில் வருகிறது.

மொத்தம் பதிவான வாக்குகள்ல ஒரு வாக்கு குறையுதேனு கேட்டதுக்கு, அது எங்கயோ காணாமல் போயிடுச்சுனு அதிகாரிகள் சொல்றாங்க.
முத்துலட்சுமி தரப்பினர்

ஆனால் அதிகாரிகள் வேணும்னே, முத்துலட்சுமி வாங்கிய ஓட்டுகள்ல, ஒரு ஓட்டை மறைச்சு, 84 ஓட்டுன்னு குறைச்சு சொல்றாங்க. லலிதாவை ஜெயிக்க வைக்குறதுக்காகவே இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க. மொத்தம் பதிவான வாக்குகள்ல ஒரு வாக்கு குறையுதேனு கேட்டதுக்கு, அது எங்கயோ காணாமல் போயிடுச்சுனு அதிகாரிகள் சொல்றாங்க. இதை நாங்க சும்மா விடமாட்டோம். நீதிமன்றத்துல வழக்குத் தொடருவோம்” எனக் கொந்தளிக்கின்றனர்.

ஒரே ஒரு அரசு ஊழியர்தான்... ஆனால் 4 தபால் ஓட்டு!

இதே எண்கண் ஊராட்சி ஒன்றாவது வார்டில் இன்னொரு குளறுபடியும் நிகழ்ந்துள்ளது. இந்த வார்டில் வசிக்கும் ஒரு பெண், சத்துணவுப் பணியாளராக உள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் இங்கு அரசு ஊழியரே கிடையாதாம். ஆனால், இங்கு 4 தபால் ஓட்டுகள் பதிவானதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. `இதுவும்கூட திட்டமிட்ட வேலைதான்' என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.