Published:Updated:

`வாக்காளர்களுக்கு வெங்காய பார்சல்..?’ - திருப்புவனத்தைப் பதற வைத்த லாரி

திருப்புவனத்தில் சிக்கிய லாரி
திருப்புவனத்தில் சிக்கிய லாரி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வந்துகொண்டிருந்தபோது அரசியல் கட்சியினர் கண்ணில் அந்த லாரி தென்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கிளப்பும் அளவுக்கு வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்தது.

வெங்காயம்
வெங்காயம்

வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை மீம்ஸ் கிரியேட்டர்கள் கையில் வசமாகச் சிக்கியது. தற்போது அதன் தாக்கம் குறைய ஆரம்பித்த நிலையில், மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையிலிருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்துக்கு 24 டன் வெங்காயம் லாரி மூலம் வந்துகொண்டிருந்தது.

வடமாநில ஓட்டுநர் மதுரை ரிங் ரோடு அருகே பாதையை சரியாகக் கேட்காமல் ராமேஸ்வரம் சாலையில் ஓட்டிவந்துள்ளார். அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வந்துகொண்டிருந்தபோது அரசியல் கட்சியினர் கண்ணில் அந்த லாரி தென்பட்டுள்ளது. சந்தேகப்படும்படி லாரி செல்லவும் தேர்தலுக்கு வெங்காயத்தை பார்சல் செய்து கொடுத்து விடுவார்களோ என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிக்கிய லாரி
சிக்கிய லாரி

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் லாரியை மறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடன் ஒப்படைத்தனர். வருவாய்த்துறை விசாரணையில் வண்டி உரிமையாளர் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால் வாகனத்தை ஒப்படைத்துவிட்டனர்.

இது குறித்து மானாமதுரை டி.எஸ்.பி, யிடம் பேசினோம், `` லாரியைப் பறிமுதல் செய்யும்போது வாகனத்தை ஓட்டிவந்த வட இந்தியர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. அதனால் அதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்றார்.

வெங்காயம்
வெங்காயம்

திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, ``மும்பையிலிருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சந்திரத்துக்கு வெங்காய லாரி சென்றுள்ளது. அப்போது மதுரை அருகே வழிதவறி வேறு பாதையில் வந்துவிட்டனர். அவர்களிடம் வெங்காயத்துக்கான ஆவணங்கள் இல்லை என்று விசாரணை நடத்தினோம். வாகன உரிமையாளர் அதன் ஆவணத்தைக் காண்பித்ததும் அனுப்பி வைத்துவிட்டோம்" என்றார்.

தேர்தலுக்கு வெங்காயம் கொடுக்கப் போறாங்க என்ற தகவலை சில அரசியல் கட்சியினர் பரப்பியதால் திருப்புவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு