Published:Updated:

`பள்ளியில பொருள் வாங்கினோம்; இப்போ கூடத்தில் வாங்குறோம்!'-ரேஷன் கடை இல்லாமல் தவிக்கும் 30 கிராமங்கள்

ப.கா.ரேவந்த் ஆண்டனி

``ரேஷன் கடைக்கென தனி கட்டடம் ஏதுமில்லை. இதுநாள் வரை அருகில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் பொருள்களை விநியோகித்தோம்.''

ration shop
ration shop

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெருமாத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி, அத்திப்பட்டி, அம்பேத்கர் நகர், கீழக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தங்கள் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திடம் 30 ஆண்டுகளுக்கு முன் பறிகொடுத்து, தற்போது பெருமாத்தூர் ஊராட்சியில் சிலரும், மாற்றுக்குடியிருப்பு பகுதியில் சிலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே பல அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தங்களுக்கென ஒரு ரேஷன் கடை கட்டடம் கூட இல்லை என்பதே இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.

அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை பொருள்கள், இங்குள்ள கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள ஆலோசனைக் கூடத்தில்தான் வழங்கப்படுகிறது. கேட்கவே அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

ration shop
ration shop

ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லாமல் ஏன் இங்கு பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது என்ற கேள்வியை கடை விற்பனையாளர்களிடம் முன்வைத்தோம். ``ரேஷன் கடைக்கென தனி கட்டடம் ஏதுமில்லை. இதுநாள் வரை அருகில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் பொருள்களை விநியோகித்தோம். அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நேரத்தில் எங்களை காலிசெய்யச் சொல்லிவிட்டனர். எனவே, இங்குதான் தற்போது பொருள்களை வழங்குகிறோம்" என்றார்.

இதுகுறித்து அப்பகுதிவாசியும் சமூக ஆர்வலருமான சாமிநாதன் நம்மிடம் பேசியபோது, ``இப்பகுதியில் 2000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறோம். ஆனால், எங்களுக்கென ஒரு ரேஷன் கடை இல்லை. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரேஷன் கடை செயல்பட்டுவருவதால் எங்களால் தொலைதூரத்துக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடியவில்லை. 940-க்கு மேலான ரேஷன் கார்டுகளுக்கு இங்கு பொருள்கள் வழங்க வேண்டியுள்ளதால், கூட்ட நெரிசலால் பெருமாத்தூர் ஊராட்சி மக்களும் மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வெகுதூரத்திலிருந்து வந்து பொருள்களை வாங்கிச் செல்வதால் வயதானவர்களும், பெண்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் " என்று ஆதங்கத்துடன் பேசினார்.

வெகுதூரத்திலிருந்து வந்து பொருள்களை வாங்கிச் செல்வதால் வயதானவர்களும், பெண்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சமூக ஆர்வலர்

இப்பகுதிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த உதயகுமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ``ரொம்ப நாள்களாக இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களும் கடையைக் கட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கட்டடம் கட்டுவதற்கென இருந்த இடம் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ நிதி கிடைத்ததும் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படும்" எனப் பேசி முடித்தார்.

கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வில் ஓர் அங்கமாய் விளங்கும் நியாய விலைக்கடைக்கு அலைக்கழிக்க விடாமல், விரைவில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் என நம்புவோம். கடை திறக்க காத்திருப்போம்!