Published:Updated:

`மரக்கன்றுகளுடன் நன்றி!' - நெகிழவைக்கும் கரூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்

மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்
மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்

ரமேஷின் வித்தியாசமான இந்த நன்றி அறிவிப்பு முயற்சி, வாக்காளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

தனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, `பத்து நாளைக்கு ஒருதடவை இந்த மரக்கன்றுகளைப் பார்க்க உங்க வீட்டுக்கு வருவேன். அப்போ, உங்க குறைகளைச் சொல்லுங்கள், ஆன் த ஸ்பாட்டிலேயே தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்' என்று கூறி வார்டு உறுப்பினர் ஒருவர் வித்தியாசமாக நன்றி சொல்லி வருவது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்
மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, வேட்டமங்கலம் ஊராட்சி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ். கூலி வேலை பார்த்து வரும் இவர், சமூக சேவை செய்திவதில் ஆர்வம் மிகுந்தவர். 34 வயதாகும் இந்த இளைஞர், கடந்த பத்து வருடங்களாக தனது ஊரில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, அவற்றை மரங்களாக்கியிருக்கிறார்.

`10,000 முருங்கை விதைகள்,  மரக்கன்றுகள்!’ - பதவியேற்பு விழாவில் நெகிழ வைத்த ஊராட்சி மன்றத் தலைவர்

இந்த நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாயவனைவிட 129 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார். அதனால், தனக்கு 306 வாக்குகள் அளித்து வெற்றி பெறவைத்த தனது வார்டு மக்களை கடந்த 4-ம் தேதியில் இருந்து, மரக்கன்றுகளோடு சந்தித்து வருகிறார்.

மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்
மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து, அந்த வீட்டின் தலைவரிடம் தான் கொண்டுபோகும் மரக்கன்றை வழங்கி, `எனக்கு வாக்களித்து, என்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு நன்றியா இந்த மரக்கன்றை வழங்குகிறேன். 10 நாளுக்கு ஒருமுறை உங்க வீட்டுக்கு வருவேன். இந்த மரக்கன்றை எப்படி வளர்க்கிறீர்கள் என்று பார்ப்பேன். அதோடு, நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை ஆன் த ஸ்பாட்டிலேயே தீர்க்க முயற்சி செய்வேன்' என்று சொல்லி, வாக்காளர்களை மகிழ்ச்சிக்கடலில் தள்ளுகிறார். ரமேஷின் வித்தியாசமான இந்த நன்றி அறிவிப்பு முயற்சி, வாக்காளர்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்று தருகிறது.

மரக்கன்றுகள் சகிதம் நன்றி அறிவித்துக்கொண்டிருந்த ரமேஷிடம், `வாழ்த்துகள்..' சொல்லி, பேசினோம்.

``சின்ன வயதில் இருந்தே சமூக சேவை செய்றதிலும், மரக்கன்றுகள் நடுவதிலும் ஆர்வம் அதிகம். அதோடு, ஊரோட பொதுப்பிரச்னைகளில் முன்னாடி நின்னும், மக்களுக்காகப் போராடுவேன். அதைப்பார்த்துட்டுதான், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் என்னை 3-வது வார்டுல நிக்கச் சொல்லி, என்னை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்தாங்க. மக்களுக்காக அந்த 5 வருடத்துல சிறப்பா செயல்பட்டேன். நானே சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்றது, தண்ணீர் டேங்கை சுத்தம் செய்றதுனு செயல்பட்டேன். அதனால், இந்தத் தேர்தலிலும் மக்கள் நிக்கச் சொன்னாங்க. ஓட்டுக்கு ஒரு ரூபாகூட கொடுக்கலை. ஆனா, எனக்கு 306 வாக்குகள் அளித்து, 3 வார்டு ஊராட்சி உறுப்பினராக அமோகமாக வெற்றியடைய வச்சாங்க.

மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்
மரக்கன்றுகள் வழங்கி நன்றி சொல்லும் ரமேஷ்

அந்த நன்றிக்கடனைச் செலுத்தத்தான், மரக்கன்றுகளை கொடுத்து நன்றி செலுத்தி வருகிறேன். பலர் ஆர்வமா என்னை வச்சே அவங்க வீட்டுல மரக்கன்றை வைக்கச் சொல்றாங்க. இன்னும் பலர், `இன்னும் ரெண்டு மரக்கன்றுகள் கேட்டு வாங்கிக்குறாங்க. இதுவரை, 200 பேரைச் சந்தித்து, மரக்கன்றுகளை வழங்கி நன்றி சொல்லியுள்ளேன். மீதமுள்ள வாக்காளர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்க இருக்கிறேன். வெறுமனே மரக்கன்றுகளை மட்டும் கொடுக்காமல், அடிக்கடி போய்ப் பார்த்து, மரக்கன்றுகளை ஒழுங்காக வளர்க்கிறார்களா என கண்காணிக்கவும் இருக்கிறேன். அதேபோல், மக்களின் குறைகளை 24 மணிநேரமும் தீர்க்க தயாராகவே இருக்கிறேன். இந்த உறுதியை மக்களிடம் வழங்கி வருகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு