Published:Updated:

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க, அ.ம.மு.க, நாம் தமிழருக்கு எந்த இடம் - ஓர் அலசல்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க எவ்வளவு வாக்கு வாங்கியிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் அலசுவதே இந்தக் கட்டுரை.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் சீட்டுக்கும் நோட்டுக்கும் நடக்கும் பேரத்துக்கு, அடிப்படை ஆதார ஆவணமாய் இருப்பது, அந்தக்கட்சி முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்குகளின் புள்ளி விவரம்தான். எங்கள் கட்சிக்கு இவ்வளவு வாக்கு சதவிகிதம் இருக்கிறது என்பதைக் காட்டியே கறாராகப் பேசுவது அரசியல் தலைவர்கள் பலருக்கும் கைவந்த கலையாகியிருக்கிறது.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

ஆனால் தேசியக்கட்சிகள், மாநிலத்தை மாறிமாறி ஆண்டு வரும் திராவிடக்கட்சிகள் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் வாக்குவங்கி என்பது நிரந்தரமாக இருப்பதில்லை. நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கி ஜெயிக்கும் ஒரு கட்சிதான், அடுத்த தேர்தலில் அதில் பாதியளவுக்குக் கூட வாக்குகளை வாங்க முடியாமல் படுதோல்வியைச் சந்திக்கிறது.

தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும்தான் இதில் முக்கியப்போட்டி. மற்ற கட்சிகள் அனைத்தும் இந்தக் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நிற்பதே காலம் காலமாக நடக்கும் கதையாகவுள்ளது. அந்த வகையில், நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாங்கியிருக்கிற வாக்குகளை வைத்து, அடுத்தகட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கும் அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் சீட்டுப்பேரம் நடத்துவதற்குக் கட்சிகள் தயாராகிவிட்டன. அதில் முதலில் பந்தி விரித்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

வாக்கு எண்ணிக்கை மையம்
வாக்கு எண்ணிக்கை மையம்

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளின்படி, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க என்று நிரூபித்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ராமதாஸ் மார் தட்டியிருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாகக் கூடுதல் வாக்குகளை வாங்கியுள்ள கட்சி என்ற புள்ளி விவரத்தை வைத்து, கூட்டணி மாங்காய் மரத்தில் கல்லெறிய ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ்.

பா.ம.கவுக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், அந்தக்கட்சிக்கானது மட்டும் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில், அதில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் வாக்கும் இருக்கிறது. ஆனாலும் பா.ம.க வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளை வைத்தே, அதன் வாக்கு வங்கி கணிக்கப்படும் என்பதால் அவரின் அறிக்கை, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மட்டுமே அதிக வாக்கு வங்கியைக் கொண்டுள்ள கட்சி பா.ம.க. தற்சமயம் 27 மாவட்டங்களில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்னும் தேர்தல் நடைபெறவில்லை.

இதில், தென் மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பா.ம.க களம் காணக்கூடும். அச்சமயம் அவர்களுக்கு வாக்கு வங்கி அதிகமுள்ள மாவட்டங்களில் வெற்றி பெறும் வாய்ப்பும் அதிகம். அதே நேரத்தில், பிற மாவட்டங்களில் மற்ற கட்சிகளும் வெற்றி பெறக்கூடும். அப்படியானால், இந்த வெற்றி விகிதம், வாக்கு சதவிகிதம் மாற வாய்ப்புண்டு. இந்தப் பட்டியலில் மீண்டும் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா பா.ம.க என்பதைத் தேர்தலுக்குப் பிறகுதான் பார்க்க முடியும்.

இந்த 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 91,975 பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவற்றில், 18,850 பதவிகளுக்குப் போட்டியின்றிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 73,405 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

கட்சிகளின் வெற்றி விவரம்
கட்சிகளின் வெற்றி விவரம்

இந்தப் பதவிகளுக்கு 2,31,890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 27-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவிகிதமும், 30-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 77.73 சதவிகிதமும் பதிவாயின. கிராம உள்ளாட்சித் தலைவர், கிராம உள்ளாட்சி உறுப்பினர், ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் போன்ற நான்கு பதவிகளுக்கு நான்கு வண்ணங்களிலான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி தி.மு.க முதலிடம் பெற்றது.

கட்சிகளின் வாக்கு சதவிகிதம்
கட்சிகளின் வாக்கு சதவிகிதம்

முதலிடத்தில் தி.மு.க.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 420 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., 244 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 58.1 சதவிகித வெற்றியாகும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,455 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க 2,097 இடங்களில் வெற்றிபெற்றது. இது 50.46 சதவிகித வெற்றியாகும்.

தி.மு.க தலைவர்
தி.மு.க தலைவர்

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிக இடங்களைக் கைப்பற்றி தி.மு.க, ஒட்டுமொத்த வாக்கு சதவிகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 47.18 விழுக்காடு வாக்குகளையும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 41.24 % வாக்குகளையும் தி.மு.க பெற்றுள்ளது.

ஆளும் கட்சிக்கு இரண்டாம் இடம்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 435 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க, 214 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதாவது 49 சதவிகித இடங்களை வென்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,842 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 1781 இடங்களைக் கைப்பற்றி 46.35 சதவிகித வெற்றியைப் பெற்றிருக்கிறது.

EPS,OPS
EPS,OPS

எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. மொத்தம் பதிவான வாக்குகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 41.55 சதவிகித வாக்குகளையும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 34.99 சதவிகித வாக்குகளையும் அ.தி.மு.க பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் பா.ம.க.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி பாட்டாளி மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பா.ம.க 16 இடங்களில் வென்று 44.44 சதவிகித வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 430 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க 224 இடங்களில் வென்று 52.09 சதவிகித வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

மொத்தம் பதிவான வாக்குகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3.1 சதவிகித வாக்குகளையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 4.26 சதவிகித வாக்குகளையும் பெற்று மூன்றாவது கட்சியாக பா.ம.க படியேறியுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி - 47.18 சதவிகித வாக்குகளும், தி.மு.க கூட்டணி 51.84 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 42.86 சதவிகித வாக்குகளும், தி.மு.க கூட்டணி 46.09 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

டிடிவி-யின் அ.ம.மு.க என்ன ஆனது...?

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,000 இடங்களுக்கும் அதிகமாகப்  போட்டியிட அ.ம.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 498 இடங்களில் போட்டியிட்ட அ.ம.மு.க எங்குமே ஜெயிக்கவில்லை.

TTV
TTV

வெற்றி அடிப்படையில் நான்காவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசும், ஐந்தாவது இடத்தில் தே.மு.தி.கவும், ஆறாவது இடத்தில் பி.ஜே.பியும் உள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 458 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அ.தி.மு.கவின் வாக்குவங்கி சற்று ஏறுமுகத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றி பெறுவது வழக்கம். அது இந்தத் தேர்தலில் தவிடுபொடியாயிருக்கிறது. வாக்குச்சீட்டுகளின் அடிப்படையில் நடந்த தேர்தல் என்பதால் பல இடங்களில் அதிகாரிகள் உதவியுடன் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் வாசித்துள்ளன.

கல்விக் கனவை நிறைவேற்றும் `தனியொருவன்' - `ஆரஞ்சு வியாபாரி டு பத்மஸ்ரீ' ஹஜப்பா

ஆனால் தி.மு.கவின் வெற்றியை வைத்தே தேர்தல் நியாயமாக நடந்திருப்பதாக அ.தி.மு.க அறிக்கை வாசிக்கிறது. பல்வேறு முறைகேடுகளையும் தாண்டி தி.மு.க பெற்றிருக்கும் வெற்றி பிரமாண்டமானது என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தி.மு.க கூட்டணி பெற்றுள்ள வாக்குகளுக்கும், அ.தி.மு.க பெற்றுள்ள வாக்குகளுக்கும் அதிகபட்சமாக 5 சதவிகிதம் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி - 47.18 சதவிகித வாக்குகளும், தி.மு.க கூட்டணி 51.84 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 42.86 சதவிகித வாக்குகளும், தி.மு.க கூட்டணி  46.09 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை ஆளும்கட்சியே அதிகம் வென்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நடந்த இந்த மறைமுகத் தேர்தலிலேயே கூட்டணிக்கட்சிகளுக்குள் உரசல்கள் உருவாகியுள்ளன. புகைந்துகொண்டிருக்கும் இந்தப் பகை, மீதமுள்ள பகுதிகளுக்கு நடக்கும் உள்ளாட்சித் தேர்தலிலேயே தீயாய்ப் பற்றுமா, அமைதியாய் அணைந்து விடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு