Published:Updated:

`நீங்கதான் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டீர்களே..?!' -பட்டுக்கோட்டை இளைஞரைப் பதறவைத்த கலெக்டர்

ஆனந்த்
ஆனந்த்

ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாருங்க.. அதில் நான் வந்திருந்தேன் என்பது உறுதியானால், என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க...

`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தும் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம்' எனப் புகார் வாசித்திருக்கிறார் பட்டுக்கோட்டை இளைஞர் ஒருவர்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியம் மருதபாசானியபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, மதுக்கூர் ஒன்றியத்தின் 10-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு வாபஸ் தேதி முடிந்து சின்னத்தைப் பெறுவதற்காகச் சென்றிருக்கிறார்.

புகார் மனு
புகார் மனு

தேர்தல் நடத்தும் அலுவலரோ, `வேட்பாளர் பட்டியலில் பெயரே இல்லை, சின்னத்தை எப்படி ஒதுக்க முடியும்' எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதையடுத்து, ` நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னைத் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டனர்' எனக் கூறி மாநில தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.

ஆனந்திடம் பேசினோம். `` ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட வசதியாக நாற்காலி, வைரம், கோட் சூட் என எதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டு மனு கொடுத்திருந்தேன். நான் வசிக்கும் பகுதியில் எனக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் எளிதில் வெற்றிபெற்றுவிட்டு விடுவேன் என்பதற்காக ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை மிரட்டினர். இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். ஆனால், நான் முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.

ஆனந்த்
ஆனந்த்

அதன் பிறகு வேட்புமனுவை வாபஸ் பெறும் நாள் முடிந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு சின்னத்தைப் பெறுவதற்காக சென்றேன். ஆனால், வேட்பாளர் பெயர் பட்டியலில் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் எனக் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. என் பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சிடையந்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரனிடம் கேட்டேன். `நீங்கதான் வாபஸ் வாங்கி விட்டீர்களே?' எனக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பின்னர் என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்த அவர் மறுநாள் வரச் சொன்னார். மறுநாளும் என்னைப் பார்க்காமல் தவிர்த்தார்.

பின்னர் வெங்கடாசலம் என்ற தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். அவரும், `நீங்கதான் வாபஸ் வாங்கி விட்டீர்களே?' என அதே பதிலைச் சொன்னார். `இதில் ஏதோ சதிவேலை நடந்திருக்கிறது. நீங்கள் முறைகேடு செய்துள்ளீர்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் எனக்கு எதற்காக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன், ஆதார் கார்டு எல்லாம். அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன்' எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுதொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையம், முதலமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்திருக்கிறேன்" என்றவர்,

வேட்பு மனு
வேட்பு மனு

`` தேர்தல் அலுவலர்களின் மோசடி தொடர்பாக, தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொடுத்தேன். அவர், `வாபஸ் கடிதத்தில் உங்க கையொப்பம் இருக்கே' என கேட்டார். அதற்கு, ` அந்தச் சமயத்தில் நான் இரண்டு நாள்கள் ஊரிலேயே இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்க. ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாருங்க.. அதில் நான் வந்திருந்தேன் என்பது உறுதியானால், என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க. எனக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. என்னைத் திட்டமிட்டு தேர்தலில் போட்டியிடாமல் செய்துள்ளனர். இதில் அதிகாரிகள் உடந்தையுடன் ஆளும் கட்சியினர் முறைகேடு செய்துள்ளனர். இந்த மோசடியின் பின்னால் உள்ளவர்களை அவ்வளவு எளிதில் நான் விடப்போவதில்லை" என்றார் கொந்தளிப்புடன்.

இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டோம். அவர் நமக்குப் பதில் அளிக்க முன்வரவில்லை.

அடுத்த கட்டுரைக்கு