Published:Updated:

`எங்க கவுன்சிலரைக் காணோம்!' - மக்கள் புகாரால் அதிர்ந்த கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம்

தூத்துக்குடியில், கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலரைக் காணவில்லை என ஊர் மக்கள் டிஎஸ்-யிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர் செந்தில் முருகன்
கவுன்சிலர் செந்தில் முருகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய வார்டு கவுன்சிலர்களில் தி.மு.க 8 வார்டுகளிலும், அ.தி.மு.க 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 வார்டிலும், தே.மு.தி.க 1 வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால், இரு கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களைச் சார்ந்துள்ளனர்.

புகார் அளித்த மக்கள்
புகார் அளித்த மக்கள்

இரு கட்சியினரும் 4 சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் 19 பேரும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் தி.மு.க-வினர், தி.மு.க, சி.பி.ஐ கவுன்சிலர்களுடன், சுயேச்சை கவுன்சிலர்களான 14-வது வார்டு கவுன்சிலர் ராமர், 17-வது வார்டு கவுன்சிலர் செந்தில்முருகன் ஆகியோரை ஒரு டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர்.

இதற்கு, அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர். ஆனால், அ.தி.மு.க-வினரை மீறி தி.மு.க-வினர் வேனில் கவுன்சிலர்களைக் கொண்டுசென்றதால் பரபரப்பு ஏற்பட்டது ‌. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எட்டையபுரம் சாலையில் அ.தி.மு.க, தே.மு.தி.க-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

இந்நிலையில், `17-வது வார்டு உறுப்பினர் செந்தில்முருகனைக் காணவில்லை' என அவரது சொந்த ஊரான ‌துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், ``எங்களுக்காக பணியாற்றிட, எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் செந்தில் முருகனை பதவியேற்புக்குப் பிறகு ஊருக்கு வரவிடாமல், யாரோ கடத்தியுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. ஜனநாயகக் கடமை புரிய அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். தி.மு.க-வினர், டெம்போ வேனில் அழைத்துச்சென்ற ஒன்றிய கவுன்சிலர்களில் செந்தில் முருகனும் ஒருவர் ஆவார்.

`தனி மெஜாரிட்டி; ஆளுக்கொரு கவுன்சிலர் தேவை!' -அனிதா, கீதா ஜீவன் மோதலால் திணறும் ஓட்டப்பிடாரம்

இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், ``ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு தி.மு.க தரப்புக்கு ஒரு கவுன்சிலரும், அ.தி.மு.க தரப்புக்கு 4 கவுன்சிலர்களும் தேவை. சுயேச்சையாக வெற்றிபெற்ற 4 கவுன்சிலர்களில் சண்முககனி, பழனிச்சாமி ஆகியோர் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராமர், செந்தில்முருகன் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி யூனியன் சேர்மன் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என அ.தி.மு.க தரப்பு திட்டம் போட்டது.

டெம்போவில் ஏற்றப்படும் கவுன்சிலர்கள்
டெம்போவில் ஏற்றப்படும் கவுன்சிலர்கள்

ஆனால், முந்திக்கொண்ட தி.மு.க-வினர், பதவியேற்புக்கு முந்தைய நாளே இருவரிடமும் பேசியதுடன், பதவியேற்பு அன்றே ஒரு தொகையை முன்பணமாகக் கொடுத்து தி.மு.க கவுன்சிலர்களுடன் டெம்போவில் கூட்டிச் சென்றுவிட்டார்கள். தி.மு.க-வினர், ஒரு கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம் வரை விலை பேசியதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க-வினர் பேசிய தொகையைவிட கூடுதலாகக் கொடுத்து அ.தி.மு.க தரப்புக்கு ஆதரவு எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தவர்கள் ஏமாந்துவிட்டனர்'' என்றனர்.